2016-ல் பாராலிம்பிக்ஸ் பற்றி யாருக்கும் விழிப்புணர்வு இல்லை, ஆனால் இப்போது..: மாரியப்பன் தங்கவேலு
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாராலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வெல்ல முடியவில்லை என்று மாரியப்பன் தங்கவேலு தெரிவித்துள்ளார்.
பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்று, தொடர்ந்து மூன்று பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.
இந்நிலையில் இன்று தாயகம் திரும்பிய மாரியப்பன் தங்கவேலுவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்
“பாராலிம்பிக்ஸில் நான் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் வென்றேன். பாரிஸில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சென்றேன். ஆனால் கடைசி நேரத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தங்கப் பதக்கம் வெல்ல முடியவில்லை. எனக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி. முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி. 2016-ல் பாராலிம்பிக்ஸ் பற்றி யாருக்கும் தெரியாது, ஆனால் இந்த முறை பாரிஸ் செல்வதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் ரூ. 7 லட்சம் கொடுத்து எங்களை ஊக்கப்படுத்தி அனுப்பினார்.
தமிழகத்தில் இருந்து சென்ற 4 பேரும் பதக்கத்தை வென்றோம். மேலும், அரசுத் துறையில் வேலை வாய்ப்புகள் கேட்டிருந்தேன், அதை கொடுப்பதாக நம்பிக்கை அளித்துள்ளனர். பிரதமர் மோடியை சந்தித்தபோது அடுத்த முறை தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். எங்களைப் பார்த்து தமிழ்நாட்டில் இருந்து அதிகளவில் வீரர், வீராங்கனைகள் பாராலிம்பிக்ஸில் பங்கேற்று வருகின்றனர். இந்தியா இம்முறை 29 பதக்கங்களை வென்றது. அடுத்து வரும் பாராலிம்பிக்ஸில் இந்தியா இன்னும் அதிகப் பதக்கங்களை வெல்லும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.