பூரன் பொழிந்த சிக்ஸர் மழை: கேகேஆர் போராடி தோல்வி

பதற்றமான சூழலை சரி வர கையாளாமல் கேகேஆர் பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள்.
பூரன் பொழிந்த சிக்ஸர் மழை: கேகேஆர் போராடி தோல்வி
ANI
2 min read

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.

ஐபிஎல் போட்டியில் இன்றைய முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரஹானே பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

தொடக்க பேட்டர்கள் எய்டன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் வைபவ் அரோராவின் முதலிரு ஓவரில் அடக்கி வாசித்தார்கள். ஸ்பென்செர் ஜான்சனின் முதலிரு ஓவர்களை விளாசினார்கள். பவர்பிளேயில் கடைசி ஓவரை வீசிய ஹர்ஷித் ராணா ஓவர்களில் இருவரும் தலா ஒரு சிக்ஸர் அடித்தார்கள். 6 ஓவர்களில் லக்னௌ அணி 59 ரன்கள் எடுத்தது.

பவர்பிளேவுக்கு பிறகு வருண் சக்ரவர்த்தி கட்டுப்பாட்டோடு வீசினாலும், நரைன் நிறைய ரன்களை கொடுத்தார். 10 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்தது லக்னௌ. ஹர்ஷித் ராணா தனது இரண்டாவது ஓவரில் மார்க்ரமை போல்ட் செய்து கூட்டணியைப் பிரித்தார். மார்க்ரம் 47 ரன்கள் எடுத்தார். மார்க்ரம் - மார்ஷ் இணை 99 ரன்கள் சேர்த்தது. இதே ஓவரில் மார்ஷ் இந்தப் போட்டியில் தனது 4-வது அரை சதத்தை எட்டினார்.

மார்ஷ் மற்றும் நிகோலஸ் பூரன் இன்னிங்ஸின் வேகத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்றார்கள். 12-வது ஓவர், 13-வது ஓவர், 14-வது ஓவர், 15-வது ஓவர் எனத் தொடர்ச்சியாக 4 ஓவர்களில் தலா 16 ரன்கள் விளாசினார்கள். 15 ஓவர்களில் 170 ரன்களுக்கு விரைந்தது லக்னௌ. ஆண்ட்ரே ரஸ்ஸல் பந்தில் 48 பந்துகளுக்கு 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் மார்ஷ். ருத்ரதாண்டவம் ஆடி வந்த பூரன், ஹர்ஷித் ராணா ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை பறக்கவிட்டு 21 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

அதிரடிக்கெல்லாம் அதிரடியாக ரஸ்ஸல் வீசிய 18-வது ஓவரில் பூரன் 3 பவுண்டரிகள், இரு சிக்ஸர்களை விளாசினார். 18-வது ஓவரிலேயே 200 ரன்களை கடந்தது லக்னௌ. ரிஷப் பந்துக்கு முன்பு அப்துல் சமத் மற்றும் டேவிட் மில்லர் களமிறக்கப்பட்டார்கள். இவர்கள் பெரிதளவில் பவுண்டரி, சிக்ஸர் அடிக்கவில்லை. 20 ஓவர்கள் முடிவில் லக்னௌ அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பூரன் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் உள்பட 87 ரன்கள் எடுத்தார்.

239 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கேகேஆருக்கு பவர்பிளேயில் நல்ல தொடக்கம் தேவைப்பட்டது. ஆகாஷ் தீப் முதல் பந்தை வைட் மூலம் பவுண்டரி கொடுத்து அதற்கான சரியான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். சுனில் நரைன் மற்றும் குயின்டன் டிகாக் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆகாஷ் தீப் வீசிய 3-வது ஓவரில் டி காக் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

உள்ளே வந்த கேப்டன் ரஹானே இன்னிங்ஸின் வேகம் குறையாமல் பார்த்துக்கொண்டார். முதலிரு ஓவர்களில் ரிதம் இல்லாமல் 30 ரன்கள் கொடுத்த ஆகாஷ் தீப்பிடம் பவர்பிளேயில் மூன்றாவது ஓவரை வீசச் சொன்னது ஏன் எனத் தெரியவில்லை. இதிலும் 3 பவுண்டரிகளை கொடுத்தார் அவர்.

அவேஷ் கான் வீசிய பவர்பிளேயின் கடைசி ஓவரில் ரஹானே இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியை அடிக்க 6 ஓவர்களில் 90 ரன்கள் குவித்தது கேகேஆர். பவர்பிளே முடிந்த கையோடு திக்வேஷ் ராதி ஓவரில் நரைன் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரகுவன்ஷிக்குப் பதில் வெங்கடேஷ் ஐயர் முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். சுழற்பந்துவீச்சில் ரஹானே மற்றும் வெங்கடேஷ் ஐயர் சீரான வேகத்தில் விளையாட 10 ஓவர்களில் கேகேஆர் 129 ரன்கள் எடுத்தது. கடைசி 10 ஓவர்களில் கேகேஆர் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 11 ஆக மட்டுமே இருந்தது.

26 பந்துகளில் அரை சதம் அடித்த ரஹானே, ஷார்துல் தாக்குர் தொடர்ச்சியாக 5 வைட் பந்துகளை வீசிய ஓவரில் ஃபுல்டாஸ் பந்தில் 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இடக்கை, வலது கை பேட்டர்கள் திட்டத்துடன் இருந்த கேகேஆர் ரஹானே விக்கெட்டுக்கு பிறகு ரமண்தீப் மற்றும் ரகுவன்ஷியை அனுப்பியது. இருவரும் ஏமாற்றமளித்து ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தார்கள். கடைசி 5 ஓவர்களில் கேகேஆர் வெற்றிக்கு 66 ரன்கள் தேவை என்ற பதற்றமான சூழல் உருவானது.

பதற்றமான சூழலை சரி வர கையாளாமல் கேகேஆர் பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். 45 ரன்கள் எடுத்த வெங்கடேஷ் ஐயர், ஆகாஷ் தீப் பந்தில் தவறான நேரத்தில் ஆட்டமிழந்தார். ரஸ்ஸல் வந்த வேகத்தில் ஒரு சிக்ஸரை அடித்தாலும் ஷார்துல் தாக்குர் பந்தில் ஆட்டமிழந்தார்.

மொத்த பொறுப்பும் ரிங்கு சிங் தலை மேல் ஏற, கடைசி 3 ஓவர்களில் 45 ரன்கள் தேவை என்ற மிகக் கடினமான நிலை உருவானது. அவேஷ் கான் வீசிய 19-வது ஓவரில் ரிங்கு ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகள் அடித்ததால், கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டன. ரவி பிஷ்னாய் பந்துவீசினார். ஹர்ஷித் ராணா முதல் பந்தில் பவுண்டரி அடிக்க, கடைசி 3 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட்டன, களத்தில் ரிங்கு சிங். அவரால் இரு பவுண்டரிகள் ஒரு சிக்ஸரை மட்டுமே அடிக்க முடிந்தது. 20 ஓவர்களில் கேகேஆர் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்கள் மட்டுமே எடுத்தது.

லக்னௌ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. புள்ளிகள் பட்டியலில் லக்னௌ அணி 6 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. கேகேஆர் 4 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in