ருதுராஜின் சதத்தை முறியடித்த ஸ்டாய்னிஸின் சதம்: சென்னையில் சிஎஸ்கே தோல்வி!

ஐபிஎல் போட்டியில் இலக்கை விரட்டும்போது அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற புதிய சாதனையைப் படைத்தார்.
ருதுராஜின் சதத்தை முறியடித்த ஸ்டாய்னிஸின் சதம்: சென்னையில் சிஎஸ்கே தோல்வி!
ANI

சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் சிக்கல் இருப்பதை ஒவ்வொருமுறையும் மறைத்து விடுகிறார்கள் ருதுராஜ் கெயிக்வாடும் ஷிவம் துபேவும். இம்முறை அவர்களுடைய அபாரமான பங்களிப்பினால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது சிஎஸ்கே. ஆனால், பிறகு ஸ்டாய்னிஸின் அட்டகாசமான பேட்டிங், இந்த இலக்கையும் சேப்பாக்கத்தில் தாண்டிச் சென்றுவிடும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அப்படியொரு அதிர்ச்சிகரமான நாளாக சிஎஸ்கே ரசிகர்களுக்கு அமைந்தது.

இதற்கு முன்பு இந்த வருடம் சேப்பாக்கத்தில் விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் வென்றதால் நம்பிக்கையுடன் களமிறங்கியது சிஎஸ்கே. டாஸில் தோற்றாலும் ஆரம்பத்தில் ஜடேஜாவை முதல் ஓவரிலேயே 1 ரன்னில் இழந்தாலும் ருதுராஜின் உடல்மொழியில் நல்ல ஆட்டத்துக்கான உத்வேகம் தெரிந்தது.

ரச்சின் ரவிந்திராவுக்குப் பதிலாக அணியில் இடம்பிடித்த மிட்செல் மீண்டும் ஏமாற்றினார். ஒரு பவுண்டரி மட்டும் அடித்து 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரவிந்திர ஜடேஜா களமிறங்கினார். சிஎஸ்கே அணி இந்த வருடம் பேட்டிங்கில் தடுமாறுவது ஒவ்வொரு ஆட்டத்திலும் தெரிகிறது. கெயிக்வாட், ஜடேஜா, கடைசி சில ஓவர்களில் தோனி தவிர வேறு எந்த நல்ல அம்சமும் பேட்டிங்கில் இருப்பதாகத் தெரியவில்லை. ஜடேஜா, ரஹானே, மிட்செல், ரச்சின் ஆகியோர் நினைத்தது போல விளையாடாதது அணிக்குப் பல சங்கடங்களை ஏற்படுத்துகிறது.

பவர்பிளேயில் 49/2 என எடுத்த சிஎஸ்கேவுக்கு, அடுத்து மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. 28 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார் ருதுராஜ். ஜடேஜா பந்துகளை வீணடித்து 19 பந்துகளில் 16 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். களமிறங்கினார் ஷிவம் துபே.

12 ஓவர்களின் முடிவில் 100 ரன்களைக் கடந்தாலும் முதல் சிக்ஸர், 13-வது ஓவரில் ஷிவம் துபேவின் தயவில் தான் கிடைத்தது. ருதுராஜ் - துபே கூட்டணி சுறுசுறுப்பாக ரன்களை எடுக்க ஆரம்பித்தது. ஆட்டத்தின் போக்கு துபே வந்தபிறகு மாறியது. சிக்ஸர்கள் பறக்க ஆரம்பித்தன. யஷ் தாக்குர் வீசிய 16-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்தார் துபே. இந்திய டி20 அணி, துபே இல்லாமல் களமிறங்க முடியாது என்கிற நம்பிக்கையை மேலும் விதைத்த ஆட்டம் இது.

தொடர்ந்து கவனமாகவும் பொறுப்பாகவும் நடு ஓவர்களில் பந்தை வீணடிக்காமலும் விளையாடிய ருதுராஜ், 56 பந்துகளில் தனது 2-வது ஐபிஎல் சதத்தை அடித்தார். இந்தியாவில் அவருக்கு முதல் ஐபிஎல் சதம். கடைசி மூன்று ஓவர்களில் பந்துகள் பதம் பார்க்கப்பட்டன. 27 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்த துபே, கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார். இன்னும் 2 பந்துகளில் மீதமுள்ள நிலையில் ரசிகர்களின் காட்டுக்கத்தல்களுக்கு நடுவே தோனி களமிறங்கினார். 5-வது பந்தில் ருதுராஜ் சிங்கிள் எடுத்தார். கிடைத்த ஒரு பந்தில் பவுண்டரி அடித்து ரசிகர்களுக்கு நிம்மதியைத் தந்தார் தோனி.

சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. இது போதும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.

முதல் ஓவரிலேயே டி காக்கை போல்ட் செய்தார் தீபக் சஹார். ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடித்து 5-வது ஓவரில் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் கே.எல். ராகுல். படிக்கல், ஜடேஜா போல நிதானமாக விளையாடினார். ஆனால் ஸ்டாய்னிஸ், பந்துகளை வீணடிக்காமல் ரன்கள் சேர்த்துக்கொண்டிருந்தார். அவர் கடைசி வரை நிற்கப் போகிறார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 26 பந்துகளில் அரை சதமெடுத்தார். பதிரனாவின் முதல் ஓவரில் படிக்கல் 13 ரன்களுக்கு போல்ட் ஆனார். இதன்பிறகு பூரனும் ஸ்டாய்னிஸும் அருமையான கூட்டணி அமைத்து சிஎஸ்கே அணியை மிரட்டினார்கள். 4 ஓவர்களுக்கு 54 ரன்கள் தேவை என்கிற நிலைமைக்குக் கொண்டு வந்தார்கள். ஆனால், 17-வது ஓவரில் பதிரனா, பூரனை 34 ரன்களுக்கு வீழ்த்தினார். இன்னிங்ஸ் முழுக்க ஆதிக்கம் செலுத்திய ஸ்டாய்னிஸ், 56 பந்துகளில் சதமடித்தார். இது அவருடைய முதல் ஐபிஎல் சதம். சேப்பாக்கம் ரசிகர்களுக்கு ஒரே நாளில் இரு சதங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. சிஎஸ்கே தோல்வியடைந்தாலும் இந்த ஒரு திருப்தி கிடைத்திருக்கும்.

கடைசி ஓவர் வரை ஸ்டாய்னிஸ் நின்றதுதான் சிஎஸ்கேவுக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. கடைசி நான்கு ஓவர்களையும் பதிரனா, முஸ்தஃபிஸுர் பார்த்துக்கொண்டார்கள். 24 பந்துகளில் 54 ரன்கள் தேவை என்கிற கடினமான நிலையிலும் ஸ்டாய்னிஸ் அட்டகாசமாக விளையாடி வெற்றிகரமாக இலக்கை விரட்டினார். 11-வது ஓவருக்குப் பிறகு தொடர்ந்து ரன்களை விட்டுக்கொடுத்தது கடைசி ஓவர்களில் சிக்கலாக்கியது. பூரன் கிளம்பினாலும் ஹூடா, ஸ்டாய்னிஸுக்கு நல்ல இணையாக விளங்கினார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டபோது, முதல் பந்தில் சிக்ஸர் அடித்தார் ஸ்டாய்னிஸ். பிறகு பவுண்டரிகளாக விளாசி, 3 பந்துகள் மீதமுள்ள நிலையில் ஆட்டத்தை முடித்தார் அசகாய சூரன் ஸ்டாய்னிஸ். 124 ரன்கள் எடுத்த அவர், ஐபிஎல் போட்டியில் இலக்கை விரட்டும்போது அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற புதிய சாதனையைப் படைத்தார்.

சிஎஸ்கேவை அடுத்தடுத்து வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியது லக்னெள. சிஎஸ்கே 5-வது இடத்துக்கு இறங்கியது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in