ஆர்சிபியையும் வீழ்த்திய மயங்க் யாதவின் சூறாவளிப் பந்துவீச்சு!

அதிரடியாக விளையாடிய டி காக் 5 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 56 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார்.
ஆர்சிபியையும் வீழ்த்திய மயங்க் யாதவின் சூறாவளிப் பந்துவீச்சு!
ஆர்சிபியையும் வீழ்த்திய மயங்க் யாதவின் சூறாவளிப் பந்துவீச்சு!ANI

ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னௌ அணிகள் பெங்களூருவில் விளையாடின. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ஃபாப் டு பிளெஸ்ஸி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

லக்னௌ அணியில் டி காக் மற்றும் ராகுல் ஆகியோர் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 53 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை மேக்ஸ்வெல் பிரித்தார். ராகுல் 2 சிக்ஸர்களுடன் 14 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து படிக்கலும் 6 ரன்களில் வெளியேறினார்.

இதன் பிறகு ஸ்டாய்னிஸ், டி காக் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். டி காக் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். ஸ்டாய்னிஸ் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து பூரன் - டி காக் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் வேகமாக உயர்ந்தது.

ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய டி காக் 5 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 56 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து வெளியேறினார். பூரன் 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

இதன் மூலம் லக்னௌ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய ஆர்சிபி அணியில் கோலி, ஃபாப் டு பிளெஸ்ஸி ஆகியோர் சிறப்பாக விளையாடினர். 4 ஓவர்களில் 40 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை தமிழ்நாட்டை சேர்ந்த மணிமாறன் சித்தார்த் பிரித்தார். கோலி 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து ஃபாப் டு பிளெஸ்ஸி 19 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இதன் பிறகு மேக்ஸ்வெல் ரன் எதுவும் எடுக்காமலும், கிரீன் 9 ரன்களிலும் மயங்க் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆர்சிபி அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்து தடுமாறியது.

இதைத் தொடர்ந்து படிதார் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாட, அனுஜ் ராவத் 11 ரன்களில் வெளியேறினார். இதன் பிறகு படிதாரும் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசியில் லாம்ரோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தாலும் அவருடன் யாரும் நல்ல கூட்டணியை அமைக்கவில்லை.

இம்பாக்ட் வீரராகக் களமிறங்கிய லாம்ரோர் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 13 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஆர்சிபி அணி 153 ரன்களுக்கு ஆட்டமிழந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அருமையாக பந்துவீசிய மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in