மும்பையை வீழ்த்தி 3-வது இடத்துக்கு முன்னேறிய லக்னௌ!
மும்பையை வீழ்த்தி 3-வது இடத்துக்கு முன்னேறிய லக்னௌ!ANI

மும்பையை வீழ்த்தி 3-வது இடத்துக்கு முன்னேறிய லக்னௌ!

சுலபமான இலக்கு என்றாலும் கடைசி ஓவரில் தான் வென்றது லக்னௌ அணி.

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌ அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் லக்னௌ - மும்பை அணிகள் லக்னௌவில் விளையாடின. டாஸ் வென்ற லக்னௌ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

மும்பை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை ரோஹித் சர்மா 4 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 10 ரன்கள், திலக் வர்மா 7 ரன்கள், பாண்டியா ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேற மும்பை அணி 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதைத் தொடர்ந்து வதேரா, இஷான் கிஷன் நல்ல கூட்டணியை அமைத்து தந்தனர். இருவரும் சேர்ந்து 53 ரன்கள் எடுத்தனர். இதன் பிறகு இஷான் கிஷன் 36 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து வதேரா - டிம் டேவிட் கூட்டணி அமைத்தனர். இருவரும் அதிரடியாக விளையாடினாலும் அணியின் ஸ்கோர் உயரவில்லை.

வதேரா 41 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். டிம் டேவிட் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.

இதன் பிறகு விளையாடிய லக்னௌ அணியில் இம்பாக்ட் வீரராக வந்த ஆர்ஷின் குல்கர்னி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து ராகுல் - ஸ்டாய்னிஸ் கூட்டணி அமைத்து 59 ரன்கள் சேர்த்தனர். ராகுல் 22 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்து வந்த ஹூடா 18 ரன்களில் வெளியேறினார்.

இவர்களது விக்கெட்டை பாண்டியா வீழ்த்தினார். அதிரடியாக விளையாடிய ஸ்டாய்னிஸ் அரை சதம் அடித்தார். பின்னர் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன், 45 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து நபி பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு ஆஷ்டன் டர்னர் 4 ரன்களிலும், பதோனி 6 ரன்களிலும் வெளியேறினர்.

முடிவில் பூரன் 14 ரன்கள் எடுத்து இலக்கை எட்ட உதவினார். சுலபமான இலக்கு என்றாலும் கடைசி ஓவரில் தான் வென்றது லக்னௌ அணி. 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னௌ அணி 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது.

logo
Kizhakku News
kizhakkunews.in