ராகுல், டி காக் அபார கூட்டணி: லக்னௌ அணியிடம் சிஎஸ்கே தோல்வி!

டி காக் 43 பந்துகளில் 54 ரன்களும், ராகுல் 53 பந்துகளில் 82 ரன்களும் எடுத்தனர்.
லக்னௌ அணியிடம் சிஎஸ்கே தோல்வி!
லக்னௌ அணியிடம் சிஎஸ்கே தோல்வி!ANI

சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌ அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் லக்னௌ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் லக்னௌவில் விளையாடின. டாஸ் வென்ற லக்னௌ கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

லக்னௌ அணியில் மேட் ஹென்றி சேர்க்கப்பட்டார். சிஎஸ்கேவில் இரு மாற்றங்களாக டேரில் மிட்செலுக்குப் பதில் மொயீன் அலியும், ஷார்துல் தாக்குருக்குப் பதில் தீபக் சஹாரும் சேர்க்கப்பட்டனர்.

சிஎஸ்கே அனிக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. கடந்த சில ஆட்டங்களாக சொதப்பிவரும் ரச்சின் ரவீந்த்ரா ரன் எதுவும் எடுக்காமல் மோஷின் கான் பந்தில் வெளியேறினார். இதன் பிறகு கெயிக்வாட் 13 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ரஹானே ஒருபக்கம் அதிரடியாக விளையாட அவருடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் ரன்களை வேகமாக சேர்த்தனர். ரஹானே ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து கிருனாள் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு துபே 3 ரன்களிலும், ரிஸ்வி 1 ரன்னிலும் வெளியேற 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது சிஎஸ்கே அணி.

இதைத் தொடர்ந்து மொயீன் அலியும், ஜடேஜாவும் கூட்டணி அமைத்தனர். அதிரடியாக விளையாடிய ஜடேஜா அரை சதம் அடித்தார். மொயீன் அலி 3 சிக்ஸர்களுடன் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தோனி களமிறங்கினார். சமீபத்தில் மும்பைக்கு எதிராக அசத்தலாக விளையாடிய தோனி, இந்த ஆட்டத்திலும் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடினார்.

இதன் மூலம் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. தோனி 9 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்தார். ஜடேஜா ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 40 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய லக்னௌ அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைந்தது. டி காக் மற்றும் ராகுல் ஆகியோர் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்களையும் வேகமாக உயர்த்தினர். லக்னௌ அணி 6 ஓவர்கள் முடிவில் 54 ரன்கள் எடுத்தது. 10.5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது லக்னௌ அணி.

சிஎஸ்கே அணி 6 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் எந்த பலனும் இல்லை. இந்த ஜோடியை அவர்களால் பிரிக்க முடியவில்லை. அசத்தலாக விளையாடிய ராகுல் அரை சதம் அடித்தார். இதைத் தொடர்ந்து டி காக்கும் அரை சதம் அடித்தார். 130 ரன்களை எடுத்து இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த கூட்டணி எனும் சாதனையை இந்த ஜோடி படைத்தது.

இதைத் தொடர்ந்து 15 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட். டி காக் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 43 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து முஸ்தஃபிஸுர் ரஹ்மான் பந்தில் ஆட்டமிழந்தார். 15 ஓவர்களில் 134 எடுத்தது லக்னௌ அணி. 5 ஓவர்களில் 43 ரன்கள் தேவைப்பட்டது.

அடுத்ததாக வந்த பூரனும் அதிரடியாக விளையாட, ராகுல் 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் பிறகு ஒரு ஓவர் மீதமிருந்த நிலையில் லக்னௌ அணி இலக்கை எட்டி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பூரன் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார்.

சிஎஸ்கே அணிக்கு இது 3-வது தோல்வியாகும். லக்னௌ அணிக்கு இது 4-வது வெற்றியாகும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in