
இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியும் 387 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. கேஎல் ராகுல் 53 ரன்களுடனும் ரிஷப் பந்த் 19 ரன்களுடும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
மூன்றாவது நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த் தனது நேர்மறையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரை சதத்தைக் கடந்தார். இங்கிலாந்து மண்ணில் கடைசி 8 இன்னிங்ஸில் 7-வது முறையாக 50 அல்லது 50+ ரன்களை எடுத்தார் பந்த்.
உணவு இடைவேளையின் கடைசி ஓவர் வரை விக்கெட்டை இழக்காமல் சிறப்பாக பேட் செய்துகொண்டிருந்த இந்தக் கூட்டணி 141 ரன்கள் சேர்த்தது. உணவு இடைவேளைக்கு முந்தைய கடைசி ஓவரில் ரிஷப் பந்த், பந்தை லேசாக தொட்டுவிட்டு தயக்கத்துடன் ரன் எடுக்க முயற்சித்தார். பென் ஸ்டோக்ஸின் அற்புதமான த்ரோவால் அவர் 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
உணவு இடைவேளைக்குப் பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் தனது 2-வது டெஸ்ட் சதத்தை அடித்த கேஎல் ராகுல், சதமடித்த கையோடு 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் மற்றும் கேஎல் ராகுல் 10 பந்துகள் இடைவெளியில் ஆட்டமிழந்தபோது, இந்திய அணி 133 ரன்கள் பின்தங்கியிருந்தது.
ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதிஷ் ரெட்டி கூட்டணி அமைத்தார்கள். திடமான தடுப்பாட்ட பேட்டிங்கால் இந்தக் கூட்டணி 72 ரன்கள் சேர்த்தது. ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து மூன்றாவது முறையாக அரை சதத்தைக் கடந்தார். நிதிஷ் ரெட்டி 30 ரன்களுக்கு ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஜடேஜா மீண்டும் வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து கூட்டணி அமைத்தார். இந்த இணையும் 50 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து ஸ்கோரை நெருங்க உதவியது. 72 ரன்கள் எடுத்து நன்றாக பேட்டிங் செய்து வந்த ஜடேஜா வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி முன்னிலை பெற்று 400 ரன்களை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெயிலண்டர்கள் பெரிதளவில் உதவவில்லை. ஆகாஷ் தீப் 7 ரன்களுக்கும் பும்ரா டக் அவுட்டும் ஆனார்கள். 23 ரன்கள் எடுத்திருந்த வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடப் பார்த்து ஆர்ச்சர் பந்தில் ஆட்டமிழந்தார்.
1 ரன்கூட முன்னிலையைப் பெறாத இந்திய அணியும் சரியாக இங்கிலாந்து எடுத்த 387 ரன்களை எடுத்தது.
வீரர்கள் ஓய்வறைக்குச் சென்று திரும்ப இரு ஓவர்கள் கழிந்ததால், மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு ஓவர்களை மட்டுமே வீச முடியும் என்ற நிலை இருந்தது. ஓவர்களை குறைக்கும் நோக்கில் இங்கிலாந்து தொடக்க பேட்டர்கள் ஸாக் கிராலி மற்றும் பென் டக்கெட் 90 விநாடிகள் தாமதமாக வந்ததாகச் சொல்லப்படுகிறது.
பிறகு, ஜஸ்பிரித் பும்ரா பந்துவீசும்போது ஸாக் கிராலி வேண்டுமென்றே தாமதப்படுத்தினார். ஷுப்மன் கில் உள்ளிட்ட இந்திய வீரர்கள் கோபமடைந்தார்கள். அடுத்து பும்ரா வீசிய 5-வது பந்து கிராலியன் விரல்களில் பட்டதால், உடனடியாக பிசியோவை அழைத்து மேலும் தாமதப்படுத்தினார் கிராலி. இதனால், இங்கிலாந்து வீரர்கள் மற்றும் இந்திய வீரர்களிடையே ஆக்ரோஷமான கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்தது. பும்ரா ஓவரில் கடைசி பந்திலும் கிராலி விக்கெட்டை இழக்காமல் தப்பித்தார். கிராலி தாமதப்படுத்தியதால், 3-வது நாள் முடிவில் இந்திய அணியால் ஒரு ஓவரை மட்டுமே வீச முடிந்தது. இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 2 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
லார்ட்ஸ் டெஸ்ட் சமநிலையில் இருப்பதால், கடைசி இரு நாள்களில் ஆட்டத்தில் தீப்பொறி பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.