
நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் லாக்கி ஃபெர்குசன் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி லாகூரில் நாளை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான், நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் லாக்கி ஃபெர்குசன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் லாக்கி ஃபெர்குசன் பந்துவீசினார். இதன்பிறகு, வலது காலில் அவருக்கு வலி ஏற்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட மருத்துவப் பரிசோதனையில், சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி முழுக்க லாக்கி ஃபெர்குசனால் பங்கேற்க முடியாது என்பது கண்டறியப்பட்டது.
இவருக்குப் பதில் மாற்று வீரராக கைல் ஜேமிசன் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடைசியாக 2023-ல் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் விளையாடினார். ஏற்கெனவே மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் பென் சியர்ஸ் காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியிலிருந்து விலகினார். இவருக்குப் பதில் மாற்று வீரராக ஜேக்கப் டஃபி சேர்க்கப்பட்டுள்ளார்.