போர்ச்சுகல் மற்றும் லிவர்பூலின் பிரபல கால்பந்து வீரர் டியோகோ ஜோடா (28) கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
டியோகோ ஜோடா மற்றும் அவருடைய சகோதரரும் சக தொழில்முறை கால்பந்து வீரருமான ஆண்ட்ரே சில்வாவும் (26) இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
போர்ச்சுகலைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் டியோகோ ஜோடா. கால்பந்து லீக் போட்டியில் கடந்த 2020 முதல் லிவர்பூல் அணிக்காக விளையாடி வந்தார். இரு அணிகளிலும் முன்னணி முன்கள வீரர் இவர். அப்போதிலிருந்து லிவர்பூல் அணிக்காக 182 ஆட்டங்களில் விளையாடி 65 கோல்கள் அடித்துள்ளார். லிவர்பூல் அணிக்காக லீக் கோப்பை (2021-22), எஃப்ஏ கோப்பை (2021-22) மற்றும் பிரீமியர் லீக் (2024-25) ஆகிய கோப்பைகளை ஜோடா வென்றுள்ளார்.
டியோகோ ஜோடா மற்றும் அவருடைய சகோதரர் ஸ்பெயினில் காரில் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். உள்நாட்டு செய்தி நிறுவனங்களின்படி, புதன்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு விபத்து நிகழ்ந்துள்ளது. லாம்போர்கினி காரில் பயணம் செய்திருக்கிறார்கள். மற்றொரு வாகனத்தை முந்த முயற்சித்தபோது, கார் டயர் வெடித்து சாலையிலிருந்து விலகி விபத்து நேர்ந்ததாகத் தெரிகிறது. இதில் இருவரும் உயிரிழந்துள்ளார்கள்.
டியோகோ ஜோடா கடந்த 2012 முதல் இணையர் ரூட் காடோசோவுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். கடந்த ஜூன் 22 அன்று இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளார்கள். டியோகோ ஜோடா மறைவுக்கு போர்ச்சுகல் பிரதமர், போர்ச்சுகல் கால்பந்து சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.