
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில், காயம் காரணமாக விலகிய சோயிப் பஷீருக்குப் பதில் லியம் டாசன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்குப் பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலிரு டெஸ்டுகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்ற நிலையில், பரபரப்பாகச் சென்ற லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி கடைசிப் பகுதியில் வென்றது. காயம் காரணமாக பெரும்பாலும் ஃபீல்டிங் செய்யாமல் இருந்த சுழற்பந்துவீச்சாளர் சோயிப் பஷீர், முஹமது சிராஜை கடைசி விக்கெட்டாக வீழ்த்தினார்.
கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து சோயிப் பஷீர் விலகினார். இந்நிலையில், ஜூலை 23 அன்று தொடங்கவுள்ள இந்தியாவுடனான நான்காவது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சோயிப் பஷீருக்குப் பதிலாக மாற்று சுழற்பந்துவீச்சாளராக லியம டாசன் சேர்க்கப்பட்டுள்ளார்.
35 வயதுடைய சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் லியம் டாசன் 2016-ல் சென்னை டெஸ்டில் அறிமுகமானார். இங்கிலாந்துக்காக இதுவரை மொத்தம் 3 டெஸ்டுகளில் மட்டுமே விளையாடியுள்ள டாசன் பந்துவீச்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், பேட்டிங்கில் ஒரு அரை சதம் அடித்துள்ளார்.
லியம் டாசன் இங்கிலாந்துக்காக கடைசியாக 2017-ல் விளையாடினார். ஆனால், அண்மைக் காலமாக ஹேம்ப்ஷைர் அணிக்காக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். சமீபத்திய கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டியில் ஹேம்ப்ஷைர் அணிக்காக 9 ஆட்டங்களிலும் விளையாடிய அவர் 40.04 சராசரியில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதல் தர கிரிக்கெட்டில் இவர் 18 சதங்கள் உள்பட 10,731 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 31.54 சராசரியில் 371 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து அணியில் பஷீருக்குப் பதில் டாசன் சேர்க்கப்பட்டது தவிர வேறு மாற்றம் எதுவும் இல்லை.
4-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேகப் பெத்தெல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஸாக் கிராலி, லியம் டாசன், பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜாஷ் டங், கிறிஸ் வோக்ஸ்.
Ind v Eng | India v England | India vs England | Ind vs Eng | Liam Dawson | Team England | England Squad | Shoaib Bashir