
கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி நிலையில் இருப்பதால், உடலை நிறைய பராமரிக்க வேண்டியிருப்பதாக சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025-ல் இன்றைய முதல் ஆட்டத்தில் குஜராத் டைடன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இது கடைசி ஆட்டம். டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கேவில் ஆர் அஸ்வினுக்குப் பதில் தீபக் ஹூடா சேர்க்கப்பட்டுள்ளார்.
டாஸ் வென்றவுடன் ரவி சாஸ்திரியிடம் பேசிய தோனி உடல்நிலை குறித்து பகிர்ந்துகொண்டார்.
"ஆடுகளம் நன்றாக உள்ளது. 40 ஓவர்கள் முழுக்க ஆடுகளத்தின் தன்மை மாறாது என நினைக்கிறேன். என் உடல் தாக்குப்பிடிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் புதிய சவால். உடலை நிறைய பராமரிக்க வேண்டியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும்போது உடல் என்னைப் பெரிதளவில் பாதிக்கவில்லை" என்றார்.
சிஎஸ்கே குறித்து பேசிய அவர், "புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறோம். இன்று வென்றாலும் தோற்றாலும் கடைசி இடத்தில் தான் நீடிக்கப்போகிறோம். எனவே, கிரிக்கெட்டை அனுபவித்து விளையாட வேண்டும்" என்றார் தோனி.
43 வயது எம்எஸ் தோனி அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா மாட்டாரா என்பது உறுதிபடத் தெரியவில்லை. இந்நிலையில், தனது உடல்நிலை குறித்து அவர் பேசியுள்ளார். இருந்தபோதிலும், ரசிகர்கள் சிலர் இணையத்தில் இதுவே தோனியின் கடைசி ஆட்டமாக இருக்குமோ என நினைத்து உருக்கமாக பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
குஜராதுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 230 ரன்கள் குவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவின் அதிகபட்ச ஸ்கோர் இது. ஒருவேளை தோனியின் கடைசி இன்னிங்ஸாக இருக்கும்பட்சத்தில், அவருக்கு பேட்டிங் செய்வதற்கான வாய்ப்பு இன்று கிடைக்கவில்லை.