
ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்குப் போட்டியளிக்கக் கூடிய அளவுக்கு பெரிய அணிகள் இல்லாததால், சுவாரஸ்யம் குறைவாகவே இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை டி20 போட்டி அபுதாபியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை இன்று எதிர்கொள்கிறது.
இந்நிலையில், ஆசியக் கோப்பைப் போட்டியில் பெரியளவில் சுவாரஸ்யம் இல்லை என அஸ்வின் தனது பார்வையை முன்வைத்துள்ளார்.
தனது யூடியூப் சேனலில் அஸ்வின் கூறியதாவது:
"ஆசியக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கே வாய்ப்பு அதிகம். இது தவிர வேறு ஏதேனும் மாறி நடந்தால் தான் ஆச்சரியமே. ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை யாரேனும் தோற்கடித்தால் ஆச்சர்யத்துடன் நானே பார்ப்பேன். அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு தான் மிகக் குறைவு.
ஆசியாவில் இலங்கையை இரண்டாவது நல்ல அணியாகக் கருதலாம். அவர்களுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே தான் போட்டி. ஆசியக் கோப்பைப் போட்டியில் பதும் நிசங்கா, சாரித் அசலங்கா போன்ற வீரர்கள் நன்றாக விளையாடினால், ஆசியக் கோப்பை பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.
ஒருபுறம் வருண் சக்ரவர்த்தி, மறுபுறம் குல்தீப் யாதவ் இருப்பார்கள். இவர்களைத் தாண்டிவிட்டால், பும்ராவை எதிர்த்து யார் விளையாடுவது?
இலங்கை பயங்கரமாக விளையாடி 165 ரன்கள் எடுத்தால், இந்தியா அதை எளிதாக வென்றுவிடும். இந்தியாவுக்குக் கடும் போட்டியளிக்க எதிரணி 200 ரன்களாவது அடிக்க வேண்டும்? 200 ரன்களை யார் அடிப்பது?
சுவாரஸ்யத்தைக் கூட்ட தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளைச் சேர்த்து, ஆப்பிரிக்க - ஆசியக் கோப்பைப் போட்டியாக நடத்தலாம். இந்திய ஏ அணியைக் கூட சேர்க்கலாம். இதில் வங்கதேசம் என்ற அணியைப் பற்றி நாம் பேசவே இல்லை. அவர்களைப் பற்றி பேசுவதற்கு எதுவுமில்லை. இந்தப் போட்டியில் விளையாடும்
அணிகள் எப்படி இந்தியாவுடன் போட்டிபோடப் போகின்றன?
இந்தியராக, இந்திய ரசிகராக இந்தியா இந்த நிலையை அடைந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால், மற்ற அணிகளையும் நாம் எழுப்பி அழைத்துச் செல்ல வேண்டும். இந்த நிலையில் தான் ஆசியக் கோப்பை உள்ளது.
இந்த அணிகள் இந்திய அணிக்குச் சவாலளிக்க வேண்டும் என்றால், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து 155 ரன்களுக்குச் சுருட்டிவிட வேண்டும். இந்த இலக்கை எப்படியாவது அடைந்துவிடலாம்" என்றார் அஸ்வின்.
Asia Cup T20 | India | Team India | Ashwin | Indian Cricket Team | Ind v UAE | India v UAE | India vs UAE | Ind vs UAE | Afghanistan | Srilanka | Pakistan | Bangladesh |