
இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் கொனேரு ஹம்பி மகளிர் உலக ரேபிட் சாம்பியன்ஷிப்பை வென்று சாதனை படைத்துள்ளார்.
சனிக்கிழமை மாலை நியூயார்கில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஐரீன் சுகந்தரை வீழ்த்தி இவர் வெற்றி பெற்றுள்ளார்.
கருப்பு நிற காய் நகர்த்தலுடன் விளையாடிய கொனேரு ஹம்பி முதல் சுற்றில் தோல்வியடைந்திருந்தாலும், அடுத்தடுத்த சுற்றுகளில் வெற்றிகளைப் பெற்று 8.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் ஆனார்.
நாட்டின் முன்னணி செஸ் வீராங்கனையான கொனேரு ஹம்பி, 2019-க்கு பிறகு இரண்டாவது முறையாக உலக ரேபிட் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். இந்தப் போட்டியில் இவர் முதல் மூன்று இடங்களுக்குள் வருவது இது நான்காவது முறை.
2012-ல் மூன்றாவது இடம் பிடித்தார். 2019-ல் சாம்பியன். 2023-ல் இரண்டாவது இடம் பிடித்தார். தற்போது 2024-ல் மீண்டும் சாம்பியன் ஆகியுள்ளார்.
இவருடைய வெற்றிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.