
ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்டர்களுக்கான தரவரிசையில் விராட் கோலி ஓர் இடம் முன்னேறி 5-வது இடத்தை அடைந்துள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதமடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்டர்களுக்கான ஐசிசி தரவரிசை வெளியாகியுள்ளது.
சதமடித்ததன் மூலம் இந்திய வீரர் விராட் கோலி தரவரிசையில் டேரில் மிட்செல்லைப் பின்னுக்குத் தள்ளி ஓர் இடம் முன்னேற்றம் கண்டு 6-வது இடத்திலிருந்து 5-வது இடத்தை அடைந்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் எடுத்த கேஎல் ராகுல் இரு இடங்கள் முன்னேற்றம் கண்டு 15-வது இடத்தை அடைந்துள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிராக சதமடித்து அற்புதமான ஃபார்மில் உள்ள ஷுப்மன் கில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இவருக்கும் இரண்டாவது இடத்திலுள்ள பாபர் ஆஸமுக்கும் இடையிலான வித்தியாசம் 23 புள்ளிகளிலிருந்து 47 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
நியூசிலாந்தில் சதம் அடித்து விளையாடி வரும் வில் யங் மற்றும் டாம் லேதம் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். வில் யங் 14-வது இடத்திலும் டாம் லேதம் 30-வது இடத்திலும் உள்ளார்கள்.
பந்துவீச்சு தரவரிசையில் தென்னாப்பிரிக்காவின் கேஷவ் மஹாராஜ் 4-வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார். மேட் ஹென்ரி 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆடம் ஸாம்பா இங்கிலாந்துக்கு எதிராக நன்கு பந்துவீசியதால் டாப் 10-க்குள் நுழைந்துள்ளார். இந்திய வீரர் குல்தீப் யாதவ் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.