ஐபிஎல்: அன்பைப் பரிமாறிக் கொண்ட கோலி - கம்பீர்

கடந்த ஆண்டு ஐபிஎல்-லில், விராட் கோலி - கம்பீர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
அன்பை பரிமாறிக் கொண்ட கோலி - கம்பீர்
அன்பை பரிமாறிக் கொண்ட கோலி - கம்பீர்@ipl
1 min read

ஆர்சிபி - கேகேஆர் இடையிலான ஆட்டத்தில் கோலி, கம்பீர் ஆகியோர் கைக்குலுக்கி, அரவணைத்து தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின் போது விராட் கோலி மற்றும் கேகேஆர் அணியின் ஆலோசகர் கம்பீர் ஆகியோர் கட்டியணைத்து தங்களின் அன்பை வெளிப்படுத்தினர். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி - லக்னௌ இடையிலான ஆட்டம் முடிந்தபின் விராட் கோலி, கம்பீர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

முன்னதாக 2013-ல் ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்ட சமயத்திலும் இதேபோல இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆர்சிபி - கேகேஆர் இடையிலான ஆட்டத்தில் கோலி ஆட்டமிழந்த பிறகு கம்பீர் அவரை நோக்கி ஆக்ரோஷமாக செயல்பட, அவர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து 2016-ல் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில், மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மீண்டும் இவ்விருவரும் சந்தித்த நிலையில், கைக்குலுக்கி தோளை அணைத்துத் தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்.

டைம் அவுட் இடைவேளையின் போது மைதானத்திற்குள் வந்த கம்பீர், கோலியைப் பார்த்தவுடன் சிரித்த முகத்துடன் பேசினார். இதைத் தொடர்ந்து கோலியும் அவரிடம் கைகுலுக்கி, தோளை அணைத்துப் பேச ஆரம்பித்தார். இந்தக் காட்சியை பார்த்த அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.

இந்த ஆட்டத்திற்கு முன்னதாக கம்பீர் பேசிய பழைய காணொளி ஒன்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டது. இதில் பேசிய கம்பீர், “நான் எப்போதும் வீழ்த்த வேண்டும் என நினைக்கும் அணி ஆர்சிபி. மிகப்பெரிய அணியாக இருந்தாலும் ஆர்சிபி அணி இன்னும் ஒரு கோப்பையைக் கூட வென்றதில்லை. எதுவும் சாதிக்காமல் அனைத்தையும் சாதித்தது போல் ஆர்சிபி அணி செயல்படுகிறது” என்றார்.

இந்தக் காணொளி அதிகமாகப் பரவியதைத் தொடர்ந்து ஆர்சிபி - கேகேஆர் இடையிலான ஆட்டத்தில் கோலி, கம்பீர் ஆகியோர் இடையே மீண்டும் சலசலப்பு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில், அனைவருக்கும் இன்பதிர்ச்சி அளிக்கும் வகையில் இருவரும் ஒற்றுமையுடன், சிநேக உணர்வுடன் செயல்பட்டார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in