சாம் கோன்ஸ்டஸுடன் மோதல்: விராட் கோலிக்கு அபராதம்

விதிமுறையை மீறிய குற்றத்துக்காக ஒரு அபராதப் புள்ளியும் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது.
சாம் கோன்ஸ்டஸுடன் மோதல்: விராட் கோலிக்கு அபராதம்
1 min read

மெல்போர்ன் டெஸ்டில் ஐசிசி விதிமுறையை மீறி, சாம் கோன்ஸ்டஸிடம் மோதிய விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான பிஜிடி தொடரின் நான்காவது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் ஷுப்மன் கில் நீக்கப்பட்டு, வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலியாவில் நேதன் மெக்ஸ்வீனி, ஜோஷ் ஹேசில்வுட்டுக்குப் பதில் சாம் கோன்ஸ்டஸ், ஸ்காட் போலண்ட் சேர்க்கப்பட்டார்கள்.

டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் முதல் நான்கு பேட்டர்கள் அரைசதம் அடித்தார்கள். குறிப்பாக, 19 வயது இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் பும்ரா ஓவரில் ஸ்கூப் ஷாட்கள் விளையாடி அசத்தினார்.

பாக்ஸிங் டே டெஸ்டில் முதல் நாள் ஆட்டநே முடிவில் ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்திய அணியில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் நாள் ஆட்டத்தின்போது, முஹமது சிராஜ் வீசிய 10-வது ஓவர் முடிந்தவுடன் ஆஸ்திரேலிய தொடக்க பேட்டர் சாம் கோன்ஸ்டஸ் மறுமுனை நோக்கி சென்றுகொண்டிருந்தார். எதிரே வந்த விராட் கோலி, அவருடைய தோளில் இடித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உஸ்மான் கவாஜாவும் நடுவரும் இருவரையும் சமாதானப்படுத்தி பிரச்னை பெரிதாகாமல் பார்த்துக் கொண்டார்கள்.

இதன் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியான பிறகு கோலியைப் பலரும் விமர்சனம் செய்தார்கள். நன்கு விளையாடி வந்த 19 வயது வீரருடன் கோலி ஏன் தேவையில்லாமல் மோத வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்கள். கோலியுடனான இந்த சண்டைக்குப் பிறகு, பும்ரா வீசிய அடுத்த ஓவரிலேயே கோன்ஸ்டஸ் 18 ரன்கள் விளாசினார்.

முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு இந்த விவகாரம் குறித்து விசாரித்த ஆட்ட நடுவர் விராட் கோலிக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 20% அபராதம் விதித்தார். மேலும் விதிமுறையை மீறிய குற்றத்துக்காக ஒரு அபராதப் புள்ளியும் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கோலியுடனான மோதல் குறித்து சாம் கோன்ஸ்டஸ் கூறுகையில், "இருவரையும் உணர்வுகள் ஆட்கொண்டுவிட்டது. கோலி வருவதை நான் உணரவில்லை. என்னுடையக் கையுறையை சரிசெய்து கொண்டிருந்தேன். இதன்பிறகு, இருவருடையத் தோள்பட்டைகளும் மோதிக்கொண்டன. கிரிக்கெட்டில் இது நிகழும்" என்றார் கோன்ஸ்டஸ்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in