கே.எல். ராகுலை மைதானத்தில் சாடிய லக்னௌ உரிமையாளர்

2017 ஐபிஎல்-ல் புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நீக்கப்பட்டபோது, அந்த அணியின் உரிமையாளராக இருந்தவர் சஞ்சீவ் கோயங்கா.
கே.எல். ராகுலை களத்தில் சாடிய லக்னௌ உரிமையாளர்
கே.எல். ராகுலை களத்தில் சாடிய லக்னௌ உரிமையாளர்

லக்னௌ அணியின் உரிமையாளர் கே.எல். ராகுலிடம் மைதானத்தில் விரக்தியை வெளிப்படுத்திய காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நேற்று நடைபெற்ற லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9.4 ஓவர்களில் 167 ரன்களை விரட்டி அதிரடியான வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் புள்ளிகள் பட்டியலில் சன்ரைசர்ஸ் அணி 3-வது இடத்துக்கு முன்னேறியது. லக்னௌ அணி 12 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. இனி லக்னௌ அணிக்கு 2 ஆட்டங்கள் மீதமிருக்கும் நிலையில் பிளேஆஃப்க்கு தகுதி பெற அந்த அணி 2 ஆட்டங்களிலும் வெற்றிபெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்திற்கு பிறகு லக்னௌ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கே.எல். ராகுலிடம் மைதானத்தில் விரக்தியை வெளிப்படுத்தியது போல் ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவர் பேசுவதை கேட்டு ராகுல் மிகவும் அமைதியாக எதிரில் நின்று கொண்டிருந்தார். இதை பார்க்க மிகவும் கவலையாக உள்ளது என பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த தோல்வியால் லக்னௌ அணியின் பிளேஆஃப் வாய்ப்பு சற்று குறைந்துள்ளது என்றே கூறலாம். இருப்பினும் வெற்றி, தோல்வி சகஜம் தான் ஆனால், இதுபோன்று மைதானத்தில் நடந்துக் கொள்வது சரியில்லை என பல ரசிகர்கள் லக்னௌ உரிமையாளரை விமர்சித்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த 2017 ஐபிஎல்-ல் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நீக்கப்பட்டு, ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது அந்த அணியின் உரிமையாளரும் சஞ்சீவ் கோயங்காதான். 2017 ஐபிஎல்-க்கு பிறகு புனே அணி கலைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in