
சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியில் விராட் கோலியைக் கடைசி வரை விளையாடச் சொன்னதாக கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா துபாயில் மோதின. இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முதல் அணியாகத் தகுதி பெற்றது.
இந்த ஆட்டத்தில் 84 ரன்கள் எடுத்த விராட் கோலி 43-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
தன்வீர் சங்கா ஓவரில் பவுண்டரி, ட்வார்ஷிஸ் ஓவரில் பவுண்டரி, ஆடம் ஸாம்பா ஓவரில் சிக்ஸர் என கேஎல் ராகுல் அடுத்தடுத்த ஓவர்களில் ஆக்ரோஷமாக விளையாடி வந்த நேரம் அது. வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கோலி ஆட்டமிழந்தது சற்று பதற்றத்தை அதிகரித்தது.
கோலி ஆட்டமிழந்தவுடன் கேஎல் ராகுலும் தனது அதிருப்தியை களத்திலேயே வெளிப்படுத்தினார். எனினும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்த கேஎல் ராகுல் 34 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.
கேஎல் ராகுல் களமிறங்கும்போது, இந்திய அணியின் வெற்றிக்கு 87 ரன்கள் தேவைப்பட்டன.
தான் களமிறங்கியபோது விராட் கோலியிடம் நடத்திய உரையாடல் குறித்தும் கோலி ஆட்டமிழந்தது குறித்தும் கேஎல் ராகுல் மனம் திறந்துள்ளார்.
"எனக்கு மேல் வரிசையில் பேட்டிங் செய்ய பிடிக்கும்தான், பொய் சொல்ல மாட்டேன். மேல் வரிசை மற்றும் பின் வரிசையில் பேட்டிங் செய்ய பழகிவிட்டேன். நடுவரிசை அல்லது எனக்குக் கொடுக்கப்படும் பொறுப்பின்படி விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைப்பது எனக்கு மகிழ்ச்சியே.
எந்த இடத்தில் விளையாடுமாறு கேட்கிறார்களோ, அந்த இடத்தில் நான் சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன். ரோஹித் சர்மா எனக்குக் கொடுக்கும் பொறுப்புகளை சிறப்பாகவே செய்துள்ளேன். அவர் சொல்வதை, என்னால் முடிந்தளவுக்கு சிறப்பாகவே செய்துள்ளேன். ரோஹித் சர்மாவுக்கும் இதே உணர்வு தான் என நினைக்கிறேன். அவர் எப்போதுமே என்னை ஆதரித்துள்ளார். கேப்டனின் ஆதரவு இருக்கும்போது, ஆட்டத்தில் களமிறங்கும்போது ஒரு நம்பிக்கை பிறக்கும்.
நான் களமிறங்கி 10 -12 பந்துகள் எதிர்கொண்ட பிறகு, கடைசி வரை விளையாட வேண்டிய பேட்டர் நீங்கள் தான் என விராட் கோலியிடம் கூறினேன். நான் அடித்து விளையாடப் பார்க்கிறேன் அல்லது ஓவருக்கு ஒரு முயற்சியையாவது மேற்கொள்ளப் பார்க்கிறேன் என்று கூறினேன்.
காரணம், ஓவருக்கு 6 ரன்கள் மட்டுமே தேவை. ஆனால், ஓவருக்கு 6 ரன்கள் என்பது அந்த ஆடுகளத்தில் ஓவருக்கு 8 முதல் 8.5 ரன்கள் தேவை என்பதற்குச் சமம். எனவே, ஓவருக்கு ஒரு முயற்சியையாவது மேற்கொண்டு ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸர் அடித்தாக வேண்டும்.
எனவே, அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் ஸ்டிரைக்கை மாற்றி விளையாடலாம், நீங்கள் தான் நீண்ட நேரம் களத்தில் இருந்திருக்கிறீர்கள், எனக்கு அது கடினம் என்று கோலியிடம் சொன்னேன்.
புதிதாக ஒரு பேட்டர் வரும்போது, நிலைமை கடினமாகிவிடும். ஆனால், பந்து அவர் அடிப்பதற்கு ஏற்ப அவருடைய எல்லையில் இருந்ததாக உணர்ந்ததால், அவர் அப்படி ஷாட் விளையாடினார். பந்தைச் சரியாக டைமிங் செய்யவில்லை" என்று ராகுல் கூறினார்.