

லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்வாகம் கேப்டன் கேஎல் ராகுலை தக்கவைக்கவில்லை என்கிற அதிகாரபூர்வ செய்தி இன்று மாலை வெளியானது.
ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்கள் விவரங்களை இன்று மாலை வெளியிட்டன. லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸில் கேஎல் ராகுல் தக்கவைக்கப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இந்தச் செய்தி இன்று உறுதியானது. நிகோலஸ் பூரன் முதல் வீரராக ரூ. 21 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
லக்னௌ தக்கவைத்துள்ள வீரர்கள்
நிகோலஸ் பூரன் - ரூ. 21 கோடி
ரவி பிஷ்னாய் - ரூ. 11 கோடி
மயங்க் யாதவ் - ரூ. 11 கோடி
மோசின் கான் - ரூ. 4 கோடி
ஆயுஷ் பதோனி - ரூ. 4 கோடி
லக்னௌ அணியின் தக்கவைப்பு வியூகங்கள் குறித்து அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா விளக்கமளித்தார்.
"வெற்றி பெற வேண்டும் என்கிற மனநிலையுடன் விளையாடக்கூடிய, தனிப்பட்ட சாதனைகள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களைக் காட்டிலும் அணியின் நலனை முன்னிறுத்தும் வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்கிற சாதாரண மனநிலை தான். முடிந்தளவுக்குப் பிரதான அணியைத் தக்கவைக்க வேண்டும் என விரும்பினோம்.
எங்களுடைய முதல் தேர்வு மிக எளிதானது. இரு நிமிடங்களுக்கும் குறைவாகவே அந்த முடிவை எடுத்துவிட்டோம். மோசின் கான் மற்றும் ஆயுஷ் பதோனி என இரு அன்கேப்ட் வீரர்களைத் தக்கவைத்துள்ளோம். ஜாகீர் கான், ஜஸ்டின் லேங்கர் மற்றும் அனலிஸ்ட் இதுதொடர்புடைய ஆலோசனையில் ஈடுபட்டு முடிவெடுத்தார்கள்" என்றார் கோயங்கா.
கடந்த ஐபிஎல் பருவத்தின்போது ஹைதராபாதில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்துக்குப் பிறகு, மைதானத்திலேயே அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கேப்டன் கேஎல் ராகுலிடம் ஆக்ரோஷமாக உரையாடினார். இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டன.
கேஎல் ராகுல் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், இவருடைய ஸ்டிரைக் ரேட் பெரும்பாலும் விமர்சனத்துக்குள்ளாக்கப்படும். கடந்த ஐபிஎல் பருவத்தில் 14 ஆட்டங்களில் விளையாடிய கேஎல் ராகுல், 37.14 சராசரியில் 520 ரன்கள் குவித்தார். இவருடைய ஸ்டிரைக் ரேட் 136.13. ஒட்டுமொத்தமாக லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸுக்காக 38 ஆட்டங்களில் விளையாடியுள்ள கேஎல் ராகுல் 1,200-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார்.
ஐபிஎல் 2025-க்கு முன்பு எந்த அணியால் கேஎல் ராகுல் தேர்வு செய்யப்படுவார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.