ஐபிஎல் கோப்பையை 3-வது முறையாக வென்ற கேகேஆர்

சென்னையில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் சன்ரைசர்ஸ் அணியை மிக எளிதாக வென்றது.
ஐபிஎல் கோப்பையை 3-வது முறையாக வென்ற கேகேஆர்
ANI

ஐபிஎல் 2024 கோப்பையை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மிக எளிதாக வென்றது.

சென்னையில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் சன்ரைசர்ஸ் அணியை மிக எளிதாக வென்று மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையைத் தட்டிச் சென்றது.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. முதல் ஓவரிலேயே அபிஷேக் சர்மா ஸ்டார்க்கின் அட்டகாசமான பந்தில் போல்ட் ஆகி 2 ரன்களில் வெளியேற, அடுத்த ஓவரில் டிராவிஸ் ஹெட் டக் அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து திரிபாதி 9, நிதிஷ் குமார் ரெட்டி 13, கிளாசன் 16, அப்துல் சமத் 4 ரன்களில் வெளியேறியதால் 90 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது சன்ரைசர்ஸ் அணி. கடைசியில் சன்ரைசர்ஸ் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மார்க்ரம் 20, கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்தார்கள். கேகேஆர் அணியில் ரஸ்ஸல் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். ஐபிஎல் போட்டியின் இறுதிச் சுற்றில் குறைவான ரன்களை எடுத்த அணி என்கிற பெயரையும் சன்ரைசர்ஸ் எடுத்தது.

எளிதான இலக்கை அதிரடி ஆட்டத்தின் மூலம் மேலும் சுலபமாக்கியது கேகேஆர் அணி. 2-வது ஓவரில் நரைன் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் பெரிதாகப் பாதிப்பு ஏற்படவில்லை. வெங்கடேஷ் ஐயரும் குர்பாஸும் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார்கள். நடராஜன் வீசிய பவர்பிளேயின் கடைசி ஓவரில் 3 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடித்தார் வெங்கடேஷ் ஐயர். பவர்பிளேயிலேயே 72 ரன்கள் கிடைத்தன. 24 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார் வெங்கடேஷ் ஐயர். குர்பாஸ் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 10.3 ஓவர்களில் இலக்கை அடைந்து 3-வது ஐபிஎல் கோப்பையை வென்றது கேகேஆர் அணி. 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் வெங்கடேஷ் ஐயர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in