சன்ரைசர்ஸை நொறுக்கி 4-வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய கேகேஆர்!

பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
சன்ரைசர்ஸை நொறுக்கி 4-வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய கேகேஆர்!

நடப்பு ஐபிஎல் பருவத்தின் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னையில் நடைபெறும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதின. சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ், டாஸ் வென்று எந்த யோசனையுமின்றி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கடந்த ஆட்டத்தில் முதல் பந்தில் போல்டாகி டக் அவுட்டான டிராவிஸ் ஹெட், இந்த முறை ஸ்டார்க் வேகத்தில் 2-வது பந்தில் போல்டாகி டக் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க பேட்டர் அபிஷேக் சர்மா, வைபவ் அரோரா வீசிய இரண்டாவது ஓவரில் 3 ரன்களுக்கு ரஸ்ஸலிடம் கேட்ச் ஆனார். சன்ரைசர்ஸின் அதிரடி நாயகர்கள் முதலிரு ஓவர்களில் ஆட்டமிழந்தது பின்னடைவாக அமைந்தது. ராகுல் திரிபாதி வந்த வேகத்தில் பவுண்டரிகளாக அடிக்கத் தொடங்கினார்.

ஸ்டார்குக்கு பவர்பிளேயில் தொடர்ந்து மூன்றாவது ஓவரை கொடுத்தார் ஷ்ரேயஸ் ஐயர். பலனாக ஷார்ட் பந்தை மடக்கி விளையாடப் பார்த்து நிதிஷ் குமார் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பவர்பிளேயில் மூன்று விக்கெட்டுகள் விழுந்ததால், கிளாஸென் வருகையைத் தாமதப்படுத்த ஷாபாஸ் அஹமது களமிறக்கப்பட்டார். இவர் முதல் பந்திலேயே போல்டாகி வெளியேறினார்.

6 ஓவர்கள் முடிவில் 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் தடுமாறியது.

விக்கெட்டுகள் விழுந்ததைக் காட்டிக்கொள்ளாமல் திரிபாதி வேகமாக ரன் குவித்து வந்தார். நரைன் ஓவரில் சிக்ஸர் அடித்து கிளாஸெனும் அதிரடி மனநிலைக்கு மாறினார். அணியின் ரன் ரேட் 10-வது ஓவரில் 9-ஐ தாண்டத் தொடங்கியது. 10 ஓவர்களில் 92 ரன்கள் சேர்த்தது.

சன்ரைசர்ஸ் அணிக்கு இந்தக் கூட்டணி நம்பிக்கையாக அமைந்து வர, வருண் சக்ரவர்த்தி அழைக்கப்பட்டார். இவரது ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் பவுண்டரி அடித்த திரிபாதி 29-வது பந்தில் அரை சதத்தை எட்டினார். ஆனால், கிளாஸென் இதே ஓவரில் சிக்ஸருக்கு ஆசைப்பட்டு பவுண்டரி எல்லையில் ரிங்குவிடம் கேட்ச் ஆனார். திரிபாதி - கிளாஸென் இணை 37 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தது.

அப்துல் சமத் முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பி அதிரடி முனைப்பை வெளிப்படுத்தினார். இது பெரிய கூட்டணியாக மாற வேண்டிய நேரத்தில் தவறான அழைப்பால் திரிபாதி 55 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.

6.3 ஓவர்கள் மீதமிருந்ததால், இம்பாக்ட் வீரராக சன்வீர் சிங் களமிறக்கப்பட்டார். சன்ரைசர்ஸுக்கு இதுவும் அவர்களுக்கானதாக அமையவில்லை. முதல் பந்திலேயே போல்டானார். ஹர்ஷித் ராணா குறைவான வேகத்தில் வீசிய பந்தில் சமத் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

4 ஓவர்கள் மீதமிருக்க 126 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது சன்ரைசர்ஸ். கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆறுதல் அளிக்கும் வகையில் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இன்னிங்ஸை கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்றார். ரஸ்ஸல் வீசிய கடைசி ஓவரில் கம்மின்ஸ் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கம்மின்ஸ் - வியாஸ்காந்த் இணை கடைசி விக்கெட்டுக்கு 21 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்ததால், சன்ரைசர்ஸ் அணி 19.3 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது. எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவான ரன்களையே சன்ரைசர்ஸ் எடுத்தது.

ஃபில் சால்ட் இல்லாமல் களமிறங்குவதால் கொல்கத்தாவின் தொடக்கம் எப்படி இருக்கும் என்ற கேள்வி இருந்தது. சால்ட் இடத்தை அப்படியே பூர்த்தி செய்யும் வகையில் ரஹமனுல்லா குர்பாஸ் விளையாடினார். புவனேஷ்வர் குமார் வீசிய இன்னிங்ஸின் இரண்டாவது பந்தில் அழகான கவர் டிரைவ் மூலம் பவுண்டரி அடித்தார்.

கம்மின்ஸ் வீசிய இரண்டாவது ஓவரில் நரைன் இரு பவுண்டரிகள், லெக் பை மூலம் ஒரு பவுண்டரி, குர்பாஸ் ஒரு சிக்ஸர் அடிக்க இந்த ஓவரில் மட்டும் கேகேஆருக்கு 20 ரன்கள் கிடைத்தன. முதல் 13 பந்துகளில் இரு ரெவ்யூகளை பயன்படுத்தியும் சன்ரைசர்ஸுக்கு பலன் கொடுக்கவில்லை.

3 ஓவர்களில் 44 ரன்களை விளாசியதால் 4-வது ஓவரிலேயே நடராஜனை அறிமுகப்படுத்தினார் கம்மின்ஸ். இவரது ஓவரின் இரண்டாவது பந்திலேயே குர்பாஸ் ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் ஐயரும் முதல் பந்திலிருந்து துணிச்சலுடன் விளையாடத் தொடங்கியதால், சன்ரைசர்ஸால் கேகேஆரை கட்டுப்படுத்த முடியவில்லை.

நடப்பு ஐபிஎல் பருவத்தில் பவர்பிளேயில் 9-வது முறையாக 60 ரன்களை கடந்த கேகேஆர் 6 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்தது. பவர்பிளே முடிந்தவுடன் நரைன் 21 ரன்களுக்கு கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயஸ் கூட்டணி அமைக்க, வெங்கடேஷ் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் அடித்தார். 9 ஓவர்களில் 96 ரன்கள் எடுத்தது கேகேஆர். வெற்றிக்குத் தேவையான ரன் ஓவருக்கு 6-க்கு கீழ் குறைந்தது. அடுத்தடுத்து இரு ஓவர்களில் 10 மற்றும் 14 ரன்கள் எடுத்திருந்தபோது ஷ்ரேயஸ் கொடுத்த இரு கேட்ச் வாய்ப்புகளையும் தவறவிட்டது சன்ரைசர்ஸ்.

பேட்டிங்கில் பவர்பிளே கைகொடுக்கவில்லை, இம்பாக்ட் வீரர் கைகொடுக்கவில்லை, பந்துவீச்சிலும் பவர்பிளே கைகொடுக்கவில்லை, கேட்ச் வாய்ப்பையும் தவறவிட்டார்கள். அனைத்தும் ஒரே ஆட்டத்தில் நடந்ததால், சன்ரைசர்ஸ் வெற்றிக்கான வாய்ப்பை இழந்தது.

நடராஜன் தவிர்த்து அனைத்துப் பந்துவீச்சாளர்களும் நிறைய ரன்களை வழங்கியதால், டிராவிஸ் ஹெட்டை அழைத்தார் கம்மின்ஸ். இவருடைய முதல் ஓவரிலும் இரு பவுண்டரிகள். நிதிஷ் குமார் பந்தில் சிக்ஸர் அடித்த வெங்கடேஷ் ஐயர் 28 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.

வெற்றிக்குத் தேவையான ரன் 18 ஆக இருந்தபோது, ஹெட் வீசிய 14-வது ஓவரில் முதல் நான்கு பந்துகளில் மூன்று சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார் கேப்டன் ஷ்ரேயஸ். 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்த கேகேஆர் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-வது முறையாக ஐபிஎல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வெங்கடேஷ் 28 பந்துகளில் 51 ரன்களும், ஷ்ரேயஸ் 24 பந்துகளில் 58 ரன்களும் எடுத்தார்கள்.

பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in