மும்பையை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த கேகேஆர்!

4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்ரவர்த்தி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
மும்பையை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த கேகேஆர்!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஈடன் கார்டன்ஸில் மோதின. மழையால் ஆட்டம் தொடங்குவது தாமதமானது.

இரவு 9 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இரவு 9.15-க்கு ஆட்டம் தொடங்கியது. இதனால், இரு அணிகளுக்கும் தலா 16 ஓவர்கள் என ஆட்டம் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற ஹார்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

கொல்கத்தா தொடக்க பேட்டர்கள் சால்ட் மற்றும் நரைன் முதலிரு ஓவர்களில் ஆட்டமிழந்தார்கள். வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்தினார். பின்வரிசையில் நிதிஷ் ராணா, ரஸ்ஸல், ரிங்கு சிங் சற்று அதிரடி காட்டினார்கள்.

பும்ரா வீசிய கடைசிப் பந்தை ரமண்தீப் சிங் சிக்ஸருக்கு அனுப்பி இன்னிங்ஸை அதிரடியாக நிறைவு செய்தார். 16 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.

மும்பையில் அதிகபட்சமாக பும்ரா மற்றும் பியூஷ் சாவ்லா தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

மும்பையில் ரோஹித் சர்மா தடுமாறினாலும், இஷான் கிஷன் அதிரடியான தொடக்கத்தைத் தந்தார். குறிப்பாக கொல்கத்தாவின் முக்கியப் பந்துவீச்சாளரான நரைன் ஓவரிலேயே சிக்ஸர், பவுண்டரி அடித்து நெருக்கடி கொடுத்தார். பவர்பிளேயான முதல் 5 ஓவர்களில் மும்பை விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு, நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகிய சுழலர்களைக் கொண்டு ஆட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தது கொல்கத்தா. இஷான் கிஷனை நரைனும், ரோஹித் சர்மாவை வருண் சக்ரவர்த்தியும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழக்கச் செய்தார்கள்.

கிஷன் 22 பந்துகளில் 40 ரன்களும், ரோஹித் 24 பந்துகளில் 19 ரன்களும் எடுத்தார்கள்.

அடுத்து வந்த பேட்டர்கள் கொல்கத்தா பந்துவீச்சாளர்களிடம் வரிசையாக சரணடைந்தார்கள். எந்தவொரு கூட்டணியும் உருவாகவில்லை. நரைன், வருண் சக்ரவர்த்தி ரன்களைக் கட்டுப்படுத்தியதால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டும் அதிகரித்தது.

சூர்யகுமார் 11, ஹார்திக் பாண்டியா 2, டிம் டேவிட் 0, நெஹால் வதேரா 3 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். நமன் தீர் கடைசி நேரத்தில் சற்று ஆறுதல் காட்டியும், திலக் வர்மா கடைசி ஓவர் வர களத்திலிருந்ததும் மும்பைக்குக் கை கொடுக்கவில்லை.

16 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே மும்பை எடுத்தது. 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்ரவர்த்தி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18 புள்ளிகளை அடைந்து பிளே ஆஃப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in