கடைசிப் பந்து வரை போராடிய ஆர்சிபி: கேகேஆர் 1 ரன்னில் வெற்றி

கடைசி ஓவரில் கரண் சர்மா 3 சிக்ஸர்களை விளாசினார்.
கேகேஆர் 1 ரன்னில் வெற்றி
கேகேஆர் 1 ரன்னில் வெற்றிANI

ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேகேஆர் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய முதல் ஆட்டத்தில் கேகேஆர் - ஆர்சிபி அணிகள் கொல்கத்தாவில் விளையாடின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய சால்ட், ஃபெர்குசனின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 28 ரன்கள் அடித்தார். 4.2 ஓவர்களில் கேகேஆர் அணி 50 ரன்களைக் கடந்தது. இதைத் தொடர்ந்து சால்ட் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 14 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து சிராஜ் பந்தில் வெளியேறினார்.

இதன் பிறகு நரைன் 10, ரகுவன்ஷி 3, வெங்கடேஷ் ஐயர் 16 ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். ஒருபக்கம் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடினார். ரிங்கு சிங் 16 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரை சதம் அடித்த ஸ்ரேயஸ் ஐயர் 36 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து ரமண்தீப் சிங் மற்றும் ரஸ்ஸல் ஆகியோர் கூட்டணி அமைத்து அதிரடியாக விளையாட கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. ரஸ்ஸல் 20 பந்துகளில் 27 ரன்களும், ரமண்தீப் சிங் 9 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய ஆர்சிபி அணிக்கு கோலி அதிரடியான தொடக்கத்தைத் தந்தாலும், நீண்ட நேரம் விளையாடவில்லை. கோலி 7 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் பிறகு ஃபாஃப் டு பிளெஸ்ஸி 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து வில் ஜேக்ஸ் அதிரடியாக விளையாட 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆர்சிபி அணி 74 ரன்கள் எடுத்தது. அவருடன் கூட்டணி அமைத்த பட்டிதாரும் சிறப்பாக விளையாட 10 ஓவர்களில் 122 ரன்கள் எடுத்தது ஆர்சிபி அணி. வில் ஜேக்ஸ், பட்டிதார் இருவரும் அரை சதம் அடித்தனர். இந்த கூட்டணியை ரஸ்ஸல் தான் வீசிய முதல் பந்திலேயே பிரித்தார்.

ஜேக்ஸ் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 32 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதே ஓவரில் பட்டிதார் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் பிறகு கீரீன் 6 ரன்களிலும், லாம்ரோர் 4 ரன்களிலும் வெளியேறினர். இதைத் தொடர்ந்து பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக் கூட்டணி அமைத்தனர்.

4 ஓவர்கள் 42 ரன்கள் தேவைப்பட்டது. பிரபுதேசாய் 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதிராடியாக விளையாடிய கார்த்திக் 18 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க கடைசி ஓவரில் ஆர்சிபி அணிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது.

முதல் பந்தில் சிக்ஸர் அடித்தார் கரண் சர்மா, 2-வது பந்தில் ரன் இல்லை, 3-வது மற்றும் 4-வது பந்தில் மீண்டும் சிக்ஸர்கள். 2 பந்துகளில் 3 ரன்கள் தேவை. 5-வது பந்தில் வெளியேறினார் கரண் சர்மா. 7 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 20 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ரன் அவுட் ஆனார் ஃபெர்குசன். இதனால் கேகேஆர் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்சிபி அணிக்கு இது 7-வது தோல்வியாகும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in