வருண் சக்ரவர்த்தி அபாரம்: தில்லியை எளிதாக வீழ்த்திய கேகேஆர்!

கேகேஆர் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
தில்லியை எளிதாக வீழ்த்திய கேகேஆர்!
தில்லியை எளிதாக வீழ்த்திய கேகேஆர்!ANI

தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேகேஆர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் தில்லி - கொல்கத்தா அணிகள் கொல்கத்தாவில் விளையாடின. டாஸ் வென்ற தில்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

தில்லி அணிக்கு ஆரம்பம் முதல் பெரிய கூட்டணி அமையவில்லை. பிரித்வி ஷா 7 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து அரோரா பந்தில் வெளியேறினார். சமீபத்தில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து ஷாய் ஹோப் 6 ரன்களில் வெளியேற, போரெல் 15 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கேப்டன் ரிஷப் பந்த் சற்று அதிரடியாக விளையாடி ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வருண் சக்கரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார். தில்லி அணி 12 ஓவர்களில் 99 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதன் பிறகு வருண் சக்ரவர்த்தியின் சிறப்பான பந்துவீச்சில் தில்லி அணி வேகமாக விக்கெட்டுகளை இழக்க, குல்தீப் யாதவ் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் விளையாடினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் தில்லி அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.

குல்தீப் யாதவ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 26 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். வருண் சக்ரவர்த்தி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய கேகேஆர் அணிக்கு சிறப்பானத் தொடக்கத்தை அமைத்து தந்தது சால்ட் - நரைன் ஜோடி. அதிரடியாக விளையாடிய சால்ட் 26 பந்துகளில் அரை சதம் அடித்தார். 6 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து அக்‌ஷர் படேல் இந்த ஜோடியை பிரித்தார். நரைன் 10 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதன் பிறகு சால்ட் 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 33 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து அக்‌ஷர் படேல் பந்தில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து ரிங்கு சிங் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடி இலக்கை எளிதில் எட்டினர். 3.3 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் கேகேஆர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஸ்ரேயஸ் ஐயர் 23 பந்துகளில் 33 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 23 பந்துகளில் 26 ரன்களும் எடுத்தனர்.

கேகேஆர் அணி 6-வது வெற்றியை பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in