மும்பையை வீழ்த்தி 2-வது இடத்தைத் தக்கவைத்த கேகேஆர்!

12 வருடங்களுக்குப் பிறகு வான்கடேவில் மும்பையை வீழ்த்தியுள்ளது கேகேஆர் அணி.
மும்பையை வீழ்த்தி 2-வது இடத்தைத் தக்கவைத்த கேகேஆர்!
மும்பையை வீழ்த்தி 2-வது இடத்தைத் தக்கவைத்த கேகேஆர்!ANI

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேகேஆர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் மும்பை - கொல்கத்தா அணிகள் மும்பையில் விளையாடின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

கேகேஆர் அணி ஆரம்பம் முதல் தடுமாறியது. நுவான் துஷாராவின் சிறப்பான பந்துவீச்சில் சால்ட், ரகுவன்ஷி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். சால்ட் 5, ரகுவன்ஷி 13, ஸ்ரேயஸ் ஐயர் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து நரைன் 8 ரன்களிலும், ரிங்கு சிங் 9 ரன்களிலும் வெளியேற 6.1 ஓவர்களில் 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதன் பிறகு இம்பாக்ட் வீரராக வந்த மனிஷ் பாண்டே மற்றும் வெங்கடேஷ் ஐயர் அருமையான கூட்டணியை அமைத்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். 83 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை பாண்டியா பிரித்தார்.

பாண்டே 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு ரஸ்ஸல், ரமண்தீப் சிங் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற வெங்கடேஷ் ஐயர் கடைசி வரை விளையாடினார். வெங்கடேஷ் ஐயர் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 52 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் கேகேஆர் அணி 19.5 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மும்பை அணியில் நுவான் துஷாரா மற்றும் பும்ரா ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய மும்பை அணிக்கும் தொடக்கம் சரியாக அமையவில்லை. இஷான் கிஷன் 13, இம்பாக்ட் வீரராக வந்த ரோஹித் சர்மா 11, நமன் திர் 11, திலக் வர்மா 4, வதேரா 6 ரன்களில் வெளியேற கேப்டன் பாண்டியா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். மும்பை அணி 71 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஒருபக்கம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தாலும், மறுமுனையில் சூர்யாகுமார் யாதவ் அதிரடியாக விளையாடினார். அரை சதம் அடித்த அவர் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 35 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மும்பை அணி 16 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது. 4 ஓவர்களில் 46 ரன்கள் தேவைப்பட்டது. டிம் டேவிட் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக சாவ்லா ரன் எதும் எடுக்காமலும், கூட்ஸியா 8 ரன்களிலும் அடுத்தடுத்து ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தனர்.

மும்பை அணி 145 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஸ்டார்க் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் கேகேஆர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

12 வருடங்களுக்குப் பிறகு வான்கடேவில் மும்பையை வீழ்த்தியுள்ளது கேகேஆர் அணி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in