லக்னௌவை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறிய கேகேஆர்!

98 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றியைப் பெற்ற கேகேஆர் 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
லக்னௌவை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறிய கேகேஆர்!
ANI

லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின. டாஸ் வென்ற லக்னௌ கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

கொல்கத்தாவுக்கு வழக்கம்போல் ஃபில் சால்ட், சுனில் நரைன் கூட்டணி அதிரடி தொடக்கத்தைத் தந்தது. நவீன் உல் ஹக் வீசிய 3-வது ஓவரில் இருவரும் தலா இரு பவுண்டரிகளை அடித்தார்கள். மோசின் கான் ஓவரில் நரைன் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாச, 4 ஓவர்கள் முடிவில் கேகேஆர் 57 ரன்களை தொட்டது.

ரன்களை வழங்கினாலும், மீண்டும் நவீனையே பந்துவீச அழைத்தார் ராகுல். பலனாக, சால்ட் விக்கெட் கிடைத்தது. சால்ட் 14 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். யஷ் தாக்குர் பவர்பிளேயின் கடைசி ஓவரில் 2 ரன்களை மட்டுமே கொடுத்தார். இருந்தபோதிலும், 6 ஓவர்கள் முடிவில் கேகேஆர் 70 ரன்களை அடைந்தது.

பவர்பிளேவுக்கு பிறகு சுனில் நரைன் அதிரடியை தொடர்ந்தார். இவருக்கான திட்டங்களை லக்னௌ பந்துவீச்சாளர்கள் சரியாக வகுக்காததைப்போல இருந்தது. 9 ஓவர்கள் முடிவில் கேகேஆர் 100 ரன்களை தொட்டது. நரைன் 27 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.

ஸ்டாய்னிஸ் ஓவரில் 3 சிக்ஸர்கள், ரவி பிஷ்னாய் ஓவரில் சிக்ஸர் விளாச, கேகேஆர் ரன் ரேட் ஓவருக்கு 12-ஐ நெருங்கியது. எனினும், ரவி பிஷ்னாய் தனது திட்டத்தில் குறியாக இருந்து ஆஃப் ஸ்டம்ப் வெளியே முழு நீளப் பந்தாக வீச, நரைன் 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

நரைன் விக்கெட்டுக்கு பிறகு எதிர்பார்த்த அதிரடி இல்லை. ரகுவன்ஷி நீண்ட நேரம் களத்திலிருந்தாலும், ஸ்டிரைக் ரேட்டை இரட்டிப்பாக்கவில்லை. ரஸ்ஸலும் வந்த வேகத்தில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து 12 ரன்களில் கௌதமின் அற்புதமான கேட்சில் ஆட்டமிழந்தார்.

15 ஓவர்கள் முடிவில் கேகேஆர் 171 ரன்களை எட்டியது. ஷ்ரேயஸ் ஐயரும், ரிங்கு சிங்கும் பெரிய அதிரடிக்கு முயற்சித்து திணறி வந்தார்கள். 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ரிங்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ரமண்தீப் சிங் கேகேஆருக்கு தேவைப்பட்ட அதிரடியான ஃபினிஷிங்கை தந்தார். 19-வது ஓவரில் இரு சிக்ஸர்கள், இன்னிங்ஸின் கடைசி இரு பந்துகளில் சிக்ஸர், பவுண்டரி அடித்தார்.

20 ஓவர்களில் கேகேஆர் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. ரமண்தீப் சிங் 6 பந்துகளில் 25 ரன்கள் விளாசினார்.

லக்னௌவுக்கு இந்த முறையும் தொடக்கம் சரியாக அமையவில்லை. மிட்செல் ஸ்டார்க் பந்தை ஃபிளிக் செய்ய முயன்று ரமண்தீப் சிங்கின் அற்புதமான கேட்சில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ராகுல் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி முனைப்புடன் தொடங்கினாலும், அவருடைய ரன் ரேட் படிப்படியாக குறையத் தொடங்கியது. ஸ்டாய்னிஸ் வந்த வேகத்தில் அரோரா ஓவரில் சிக்ஸர், ஸ்டார்க் ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசினார்.

இவரது அதிரடியைப் பார்த்து உடனடியாக நரைனை அழைத்தார் கேகேஆர் கேப்டன் ஷ்ரேயஸ். இவர் 5-வது ஓவரில் வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்தார். இந்த வேகத்தடை, பவர்பிளேயின் கடைசி ஓவரிலும் தொடர்ந்தது. 6 ஓவர்களில் லக்னௌ 55 ரன்கள் எடுத்தது. வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் நெருக்கடி லக்னௌ பேட்டர்கள் மனதில் இருக்க, அது ராகுலை ஆட்டமிழக்கச் செய்தது. இவர் 21 பந்துகளில் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ஹூடா, வருண் சக்ரவர்த்தி சுழலில் ஆட்டமிழந்தார்.

விக்கெட்டுகள் விழுந்த நெருக்கடியைத் தணிக்க, பூரன் முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பினார். ஆனால், அடுத்த ஓவரிலேயே ரஸ்ஸல் பந்துவீச வர, ஸ்டாய்னிஸும் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேகேஆரின் கை ஓங்கியது.

ரஸ்ஸல் தனது அடுத்த ஓவரில் ஷார்ட் பந்தை வீசி பூரனை வீழ்த்தினார். 12 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் என்ற நிலையில் லக்னௌ தடுமாறியது.

பதோனியும், ஆஷ்டன் டர்னரும் தொடர்ந்து பெரிய ஷாட்டுக்கு முயற்சித்து வந்தார்கள். பதோனி 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டர்னர் இரு சிக்ஸர்கள் அடித்து ஆட்டமிழந்தார். கிருனாள் பாண்டியாவும் ஷார்ட் பந்தில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். அனைத்து பேட்டர்களும் ஆட்டமிழந்ததால், பந்துவீச்சாளர்களையும் ஆட்டமிழக்கச் செய்ய வேண்டிய சடங்கை கேகேஆர் விரைவில் செய்து முடித்தது.

லக்னௌ அணி 16.1 ஓவரில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேகேஆரில் ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி தலா 3 விக்கெட்டுகளையும், ரஸ்ஸல் 2 விக்கெட்டுகளையும், நரைன் மற்றும் ஸ்டார்க் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

98 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றியைப் பெற்ற கேகேஆர் 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in