லக்னௌ அணியை வீழ்த்தி 2-வது இடத்துக்கு முன்னேறிய கேகேஆர்

சால்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 47 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார்.
லக்னௌ அணியை வீழ்த்தி 2-வது இடத்துக்கு முன்னேறிய கேகேஆர்
ANI

லக்னௌ அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேகேஆர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய முதல் ஆட்டத்தில் கேகேஆர், லக்னௌ அணிகள் கொல்கத்தாவில் விளையாடின. டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். லக்னௌவில் ஷமார் ஜோசப் அறிமுகமானார்.

லக்னௌ அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. டி காக் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களில் வெளியேற, அடுத்ததாக தீபக் ஹூடாவும் 8 ரன்களில் வெளியேறினார். ஒருபக்கம் ராகுல் நிதானமாக விளையாட அவருடன் பதோனி இணைந்தார். இருவரும் எதிர்பார்த்த அளவிற்கு ரன்களை வேகமாக சேர்க்கவில்லை.

ராகுல் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ரஸ்ஸல் பந்தில் வெளியேறினார். இதன் பிறகு ஸ்டாய்னிஸ் 10 ரன்களில் ஆட்டமிழக்க, பதோனி 27 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். முடிவில் பூரன் அதிரடியாக விளையாடி ரன்களை வேகமாக சேர்த்தார்.

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் லக்னௌ அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. பூரன் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 32 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்டார்க் 4 ஓவர்கள் வீசி 28 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய கேகேஆர் அணியில் நரைன் 6 ரன்களிலும், ரகுவன்ஷி 7 ரன்களிலும் மோஷின் கான் பந்தில் ஆட்டமிழந்தனர். தனது அறிமுக ஆட்டத்தின் முதல் ஓவரில் ஷமார் ஜோசப் 20 ரன்களை கொடுத்தார். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து கேகேஆர் அணி தடுமாறினாலும் சால்ட் அதிரடியாக விளையாடினார். அவருடன் இணைந்த கேப்டன் ஐயர் நிதானமாக விளையாடினார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சால்ட் அரை சதம் அடித்தார். பின்னர் இருவரும் ஜோடி சேர்ந்து 100 ரன்களை சேர்த்தனர். லக்னௌ அணி எவ்வளவு முயற்சி செய்தும் இந்த கூட்டணியை பிரிக்க முடியவில்லை.

இதைத் தொடர்ந்து 26 பந்துகள் மீதமிருந்த நிலையில் கேகேஆர் அணி இலக்கை எட்டியது. சால்ட் 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 47 பந்துகளில் 89 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 6 பவுண்டரிகளுடன் 38 பந்துகளில் 38 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் கேகேஆர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in