கேகேஆர் அணி கோப்பையை வென்றது எப்படி?

ஐபிஎல் கோப்பையை 3-வது முறையாக வென்றது கேகேஆர் அணி.
கேகேஆர்
கேகேஆர்ANI

2024 ஐபிஎல் கோப்பையை வென்ற கேகேஆர் அணியில் பேட்டிங், பந்துவீச்சு, பயிற்சியாளர்கள் குழு என அனைத்தும் சிறந்து விளங்க, அந்த அணியை மற்ற அணிகளால் நெருங்க முடியவில்லை.

ஐபிஎல் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய கேகேஆர் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. 14 ஆட்டங்களில் விளையாடி 9-ல் வெற்றி பெற்றது கேகேஆர் அணி, இதில் கடைசி 2 ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து பிளே ஆஃப் மற்றும் இறுதிச் சுற்றில் மிகவும் எளிதாக சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது.

கேகேஆர் அணியைப் பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சு, பயிற்சியாளர்கள் குழு என அனைத்தும் சிறப்பாக அமைந்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள்: சால்ட் மற்றும் நரைன். சால்ட் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடினார். 12 ஆட்டங்களில் 435 ரன்களை எடுத்த சால்ட், கடைசியில் முக்கியமான ஆட்டங்களில் இருந்து விலகினார். இருப்பினும் குர்பாஸ் அந்த இடத்தை நிரப்பினார். மற்றொரு தொடக்க வீரர் நரைன் 488 ரன்கள் குவித்தார். மேலும் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். நரைன் தொடர் நாயகன் விருதை வென்றார்.

அதேபோல மிடில் ஆர்டரில் ஷ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ரகுவன்ஷி, ரமண்தீப் சிங், ரஸ்ஸல் என அனைவரும் தங்களின் பணியை சரியாக செய்தனர். ரஸ்ஸல் அணிக்கு தேவைப்பட்ட போது விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 14 ஆட்டங்களில் விளையாடிய அவர் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், பெரிய இலக்குகளை நோக்கி விளையாடிய போது ரஸ்ஸல் களமிறங்காமலேயே கேகேஆர் அணி வெற்றி பெற்றுள்ளது.

பந்துவீச்சில் ஸ்டார்க், அரோரா, ஹர்ஷித் ராணா. இடதுகை மற்றும் வலதுகை பந்துவீச்சாளர்கள் கலவையில் எதிரணிக்கு நெருக்கடி அளித்தனர். ஸ்டார்க் ஆரம்பத்தில் சொதப்பினாலும் பிளே ஆஃப் மற்றும் இறுதிச் சுற்றில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அதேபோல ஹர்ஷித் ராணா 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

சுழற்பந்தில் வருண் சக்ரவர்த்தி 21 விக்கெட்டுகளையும், நரைன் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ரன்களையும் கட்டுப்படுத்தினர்.

கேகேஆர் அணியின் பயிற்சியாளர்கள் குழுவும் மிக வலுமையாக அமைந்தது. தலைமைப் பயிற்சியாளர்- சந்திரகாந்த் பண்டிட், துணை பயிற்சியாளர் - அபிஷேக் நாயர், சுழற்பந்து பயிற்சியாளர் - பரத் அருண். இவர்களுடன் ஆலோசகர் கௌதம் கம்பீர். கடந்த ஆண்டு லக்னௌ அணியில் இருந்த கம்பீர் இந்தாண்டு கேகேஆர் அணியில் இணைந்தார்.

இவை அனைத்துக்கும் மேலாக நெருக்கடிகளைத் தாண்டி சாதித்துக் காட்டிய ஷ்ரேயஸ் ஐயர். 2023 - 2024 பருவத்துக்கான பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர் தோனி, ரோஹித் சர்மா, கெளதம் கம்பீர், பாண்டியா வரிசையில் இணைந்து ஐபிஎல் கோப்பையை வென்ற 5-வது இந்திய கேப்டன் என்கிற பெருமையை அடைந்தார்.

கிரிக்கெட் வாழ்க்கையில் தனது வளர்ச்சிக்கு கேகேஆர் அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயருக்கு அதிக பங்கிருப்பதாக ஷ்ரேயஸ் ஐயர் தனது சிறுவயது பயிற்சியாளரிடம் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு கேகேஆர் வீரர்களான வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தங்களின் வெற்றியில் அபிஷேக் நாயருக்கு அதிக பங்கிருப்பதாகக் கூறினர்.

எனவே, இப்படி அனைத்து வகையிலும் சிறந்து விளங்கிய வலுவான கேகேஆர் அணி 2024 ஐபிஎல் கோப்பையை வெல்ல தகுதியான அணி என்றே கூறலாம். ஐபிஎல் கோப்பையை 3-வது முறையாக வென்றது கேகேஆர் அணி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in