ஆட்டத்தில் முன்னேற்றம் இல்லையென்றால்...: பாக். பயிற்சியாளர் விடுத்த மறைமுக எச்சரிக்கை

“அணியில் நிறைய வீரர்கள் கவலையுடன் உள்ளனர்”.
கேரி கிரிஸ்டன்
கேரி கிரிஸ்டன்

இனி வரும் ஆட்டங்களில் முன்னேற்றம் இல்லாத பட்சத்தில் நிலைமை மோசமாகிவிடும் என பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் எச்சரித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 2 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி தான் விளையாடிய இரு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்தது. அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 120 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடி தோல்வியடைந்தது. இந்நிலையில் இனி 2 ஆட்டங்களிலும் கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ளது பாகிஸ்தான் அணி. இன்று கனடாவுடன் மோதுகிறது. முன்னதாக இந்திய அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பேசிய பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன், “அணியில் சில மாற்றங்கள் செய்வது குறித்து யோசித்து கொண்டிருக்கிறோம்” என்றார்.

அவர் பேசியதாவது:

“அனைத்து வீரர்களும் சர்வதேச அளவில் நிறைய ஆட்டங்களில் விளையாடி உள்ளனர். அழுத்தமான சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும், அது மட்டுமின்றி அனைவரும் நாடு முழுவதும் பல போட்டிகளில் பங்கேற்கிறார்கள், நிறைய வருடங்களாக விளையாடி வருகின்றனர், எனவே ஒரு ஆட்டத்தில் எப்படி முன்னேற்றம் காட்ட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.

நான் சில நாள்களாக தான் அணியினருக்கு பயிற்சி அளித்து வருகிறேன். எனவே, எங்கு தவறு நடந்தது என்பதைப் பற்றி சிந்திப்போம். அணியில் உள்ள நிறைய வீரர்களின் ஆட்டத்தை நான் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். அனைவரும் சிறந்த வீரர்கள். நிறைய வீரர்கள் ஓய்வறையில் கவலையுடன் உள்ளனர். என்னைப் பொறுத்தவரை ஒரு சர்வதேச வீரர் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும், மேலும், மேலும் ஒரு சிறந்த வீரராக உயர வேண்டும். இனி வரும் ஆட்டங்களில் முன்னேற்றம் இல்லாத பட்சத்தில் நிலைமை மோசமாகிவிடும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in