
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதமடிக்க, இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா போன்ற இந்திய கிரிக்கெட் வீரர்களும் பிசிசிஐ நிர்வாகிகளும் இந்திய திரைப் பிரபலங்களும் இந்த ஆட்டத்தை நேரில் காண வந்திருந்தார்கள்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 12-வது முறையாக இந்தியா டாஸில் தோற்க, பாகிஸ்தான் கேப்டன் முஹமது ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் இல்லை. பாகிஸ்தானில் தொடக்க பேட்டர் ஃபகார் ஸமானுக்குப் பதில் இமாம்-உல்-ஹக் சேர்க்கப்பட்டார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் முனைப்பு இல்லாமல் விளையாடியதாக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, பாபர் ஆஸம் இந்தியாவுக்கு எதிராக ரன் குவிக்கும் முனைப்பை வெளிப்படுத்தினார். துடிப்பாக விளையாடி 26 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த பாபர் ஆஸம், ஹார்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். அணிக்குத் திரும்பிய இமாம்-உல்-ஹக், 25 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து அடுத்த ஓவரிலேயே ரன் அவுட் ஆனார். பாகிஸ்தான் 10 ஓவர்களில் 52 ரன்கள் எடுத்தது. அடுத்த 10 ஓவர்களில் சௌத் ஷகீல் - ரிஸ்வான் இணை 27 ரன்கள் மட்டுமே எடுத்தது. 25-வது ஓவரிலிருந்து தான் மீண்டும் வேகமாக ரன் எடுக்க முயற்சித்தார்கள்.
77 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த ரிஸ்வான், பெரிய இன்னிங்ஸாக மாற்ற வேண்டிய நேரத்தில் அக்ஷர் பந்தில் போல்டானார். அரைசதம் அடித்த ஷகீல் 63 ரன்களுக்கு தவறான நேரத்தில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் பெரிதும் நம்பும் சல்மான் அலி ஆகாவும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்வரிசையில் குஷ்தில் ஷா மட்டும் கடைசி ஓவர் வரை விளையாடி ஓரளவுக்கு ரன் சேர்த்தார். இவர் 38 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசி கட்ட ஓவர்களில் ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ் 6.4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
49.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
242 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது இந்தியா. ரோஹித் சர்மா வழக்கம்போல் இரண்டாவது ஓவரிலிருந்து அதிரடியாக விளையாடினார். ஷுப்மன் கில்லும் இணைந்து பவுண்டரிகள் அடிக்கத் தொடங்கினார். 5-வது ஓவரில் ஷஹீன் அஃப்ரிடி வீசிய அற்புதமான யார்க்கரில் 20 ரன்களுக்கு போல்டானார் ரோஹித் சர்மா. இதன்பிறகு, அஃப்ரிடி பந்துகளை ஷுப்மன் கில் பவுண்டரிகளாக நொறுக்க, இந்திய அணி 10 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்தது.
ஹாரிஸ் ராஃப் வந்தவுடன் கவர் டிரைவ் ஷாட் மூலம் பவுண்டரி அடித்த கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை கடந்தார். சச்சின், சங்கக்காராவுக்கு அடுத்ததாக இந்த மைல்கல்லை எட்டிய கோலி, விரைவாக 14,000 ரன்களை எட்டிய வீரர் என்கிற சாதனையையும் படைத்தார். ஆட்டம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது, அப்ரார் அஹமதின் அற்புதமான பந்தில் கில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் சற்று நேரம் எடுத்துக்கொள்ள, விராட் கோலி அற்புதமாக பேட் செய்து ரன்களை உயர்த்தினார். நசீம் ஷா பந்தில் பவுண்டரி அடித்த கோலி 62 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 29 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்தது.
33 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த ஷ்ரேயஸ், 30-வது ஓவரிலிருந்து கியரை மாற்றி விளையாடி பவுண்டரிகளாக நொறுக்கினார். பாகிஸ்தான் 5-வது பந்துவீச்சாளர் இல்லாமல் தடுமாறியதை இந்தியா பயன்படுத்திக் கொண்டது. ஷ்ரேயஸும் 63 பந்துகளில் அரைசதம் அடிக்க, இந்தியா 37-வது ஓவரிலேயே 200 ரன்களை தொட்டது.
ஷ்ரேயஸ் 56 ரன்கள் எடுத்திருந்தபோது, இமாமின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்தார். பாண்டியாவும் வந்த வேகத்தில் வெளியேறினார். பிறகு, கோலி சதமடிக்க உதவும் வகையில் அக்ஷர் படேல் நிதானிக்க, கோலி 51-வது ஒருநாள் சதத்தை அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்த இந்தியா, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. தொடர்ச்சியாக இரு தோல்விகளை எதிர்கொண்ட பாகிஸ்தான், போட்டியிலிருந்து வெளியேறும் நிலையில் உள்ளது.