தொடக்க பேட்டர்கள் அரைசதம்: சீரான நிலையில் ஆஸ்திரேலியா

அறிமுக இன்னிங்ஸில் வேகப்பந்துவீச்சாளர்களை மிரட்டலாகக் கையாண்ட சாம் கோன்ஸ்டஸ் 52 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

மெல்போர்ன் டெஸ்ட் முதல் நாள் தேநீர் இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான நான்காவது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியாவில் இரு மாற்றங்கள். நேதன் மெக்ஸ்வீனி மற்றும் ஜோஷ் ஹேசில்வுட்டுக்குப் பதில் சாம் கோன்ஸ்டஸ் மற்றும் ஸ்காட் போலண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் ஷுப்மன் கில் நீக்கப்பட்டு, வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார்.

பதின் பருவ சாம் கோன்ஸ்டஸ் ஆஸ்திரேலியாவுக்கு அட்டகாசமான தொடக்கத்தைத் தந்தார். பும்ரா என்றெல்லாம் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல், இவருடையப் பந்துவீச்சிலேயே ரேம்ப் ஷாட்களை விளையாடி பவுண்டரிகள் அடித்தார்.

முதல் விக்கெட்டுக்கு 63 பந்துகளிலேயே ஆஸ்திரேலியா 50 ரன்களை எடுத்தது.

அறிமுக இன்னிங்ஸில் வேகப்பந்துவீச்சாளர்களை மிரட்டலாகக் கையாண்ட சாம் கோன்ஸ்டஸ் 5 பவுண்டரிகள், இரு சிக்ஸர்களுடன் 52 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஜடேஜா வந்தவுடன் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

உணவு இடைவேளை வரை உஸ்மான் கவாஜா மற்றும் மார்னஸ் லபுஷேன் கூட்டணி அமைத்தார்கள். உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 25 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது.

உணவு இடைவேளைக்குப் பிறகும் இருவரும் கூட்டணியைச் சிறப்பாகக் கட்டமைத்தார்கள். உஸ்மான் கவாஜா 101 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.

பெரிய கூட்டணியாக மாறக் கூடிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தபோது, பும்ரா கொண்டு வரப்பட்டார். இவர் வந்தவுடன் முதல் பந்தையே மடக்கி அடிக்கப் பார்த்து, முன்கூட்டியே பேட்டை விட்டார். ராகுலிடம் கேட்ச் ஆனார். கவாஜா 121 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.

அடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் கட்டுப்பாட்டுடன் விளையாடினார். லபுஷேனும் கவனத்தைச் சிதறவிடாமல் பொறுப்புடன் விளையாடினார். இருவரும் தேநீர் இடைவேளை வரை விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடினார்கள். தேநீர் இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 53 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து சீரான நிலையில் உள்ளது.

53 ஓவர்களில் வாஷிங்டன் சுந்தர் 1 ஓவர் மட்டுமே வீசியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in