
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் இன்று அறிவித்தார். மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஆர் அஸ்வின் ஓய்வு பெற்றுவிட்டதால், இவர்களுடைய இடத்தை நிரப்பப்போவது யார்? புதிய கேப்டன் யார்? வேகப்பந்துவீச்சுப் படையில் இடம்பெறப்போவது யார்? எனப் பல்வேறு கேள்விகள் இருந்தன.
அஜித் அகர்கரின் செய்தியாளர் சந்திப்பு இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலைக் கொடுத்துள்ளது.
ஷுப்மன் கில் கேப்டன்
இந்திய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இரு தமிழக வீரர்கள்
சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் என இரு தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.
பும்ராவின் உடற்தகுதி
பும்ரா 5 டெஸ்டுகளிலும் விளையாடுவாரா என்பது தெரியாது. டெஸ்ட் தொடர் எப்படி செல்கிறது, பும்ராவின் உடற்தகுதியைப் பொறுத்து 3 அல்லது 4 டெஸ்டுகளில் விளையாடுவாரா என்பது தெரிய வரும். 3-4 டெஸ்டுகளில் விளையாட முழு உடற்தகுதியுடன் இருந்தாலே, அவர் நமக்கான சொத்தாக இருப்பார். அணியில் அவர் இடம்பெற்றுள்ளார் என்பதே மகிழ்ச்சியானது" என்றார் அஜித் அகர்கர்.
மீண்டும் அணிக்குத் திரும்பிய கருண் நாயர், ஷார்துல் தாக்குர்
"தற்போதைய நிலையில், உள்நாட்டு கிரிக்கெட்டில் கருண் நாயர் நிறைய ரன்களை குவித்துள்ளார், டெஸ்டில் விளையாடிய அனுபவம் உள்ளது, கவுன்டி கிரிக்கெட்டிலும் விளையாடியிருக்கிறார். விராட் கோலி இல்லாதபோது, அணியில் அனுபவம் இல்லை என்பது தெரிகிறது. இவருடைய அனுபவம் அணிக்கு உதவும் என நினைத்தோம்" என்று கருண் நாயரின் தேர்வு குறித்து கூறினார் அகர்கர்.
ஷார்துலின் தேர்வு பற்றி பேசிய அவர், "ஷார்துல் தாக்குர் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர். அணியில் சமநிலையை உண்டாக்க இவரைப் போன்ற வீரர் தேவை. இந்தியா ஏ அணியுடனும் இவர் பயணிக்கிறார்" என்றார்.
முஹமது ஷமி இடம்பெறாதது ஏன்?
"முஹமது ஷமியின் உடற்தகுதியில் கடந்த வாரம் பின்னடைவு ஏற்பட்டது. எம்ஆர்ஐ செய்து பார்க்கப்பட்டது. அவரால் 5 டெஸ்டுகள் விளையாட முடியாது. அவர் தொடரிலிருந்து விலக நேரிடும் என மருத்துவக் குழுவினர் கூறினார்கள். அவர் முழு உடற்தகுதியில் இல்லையெனில், அவருக்காகக் காத்திருக்காமல் முழு உடற்தகுதியுடன் உள்ள வீரர்களைத் தேர்வு செய்யலாம் எனத் தேர்வு செய்தோம்" என்றார் அஜித் அகர்கர்.
ஷ்ரேயஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது ஏன்?
"ஒருநாள் தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் அற்புதமாக விளையாடினார். உள்நாட்டு கிரிக்கெட்டிலும் நன்றாக விளையாடினார். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது இடமில்லை" என்று அகர்கர் விளக்கமளித்தார்.
விளையாடும் XI: உங்கள் கணிப்பு என்ன?