
தில்லி கேபிடல்ஸ் ஆலோசகராக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சென் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டி தொடங்க இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணி இதுவரை கேப்டன் யார் என்பதை அறிவிக்காமல் உள்ளது. கேப்டன் குறித்த அறிவிப்பு எந்நேரத்திலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், ஆலோசகர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹேமங் பதானி தலைமையிலான தில்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் மேத்யூ மாட் உதவிப் பயிற்சியாளராகவும், முனாஃப் படேல் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் உள்ளார்கள். வேணுகோபால் ராவ் அணியின் இயக்குநராக உள்ளார். இந்த வரிசையில் தற்போது இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சென் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கெவின் பீட்டர்சென் ஐபிஎல் போட்டியில் 3 அணிகளுக்காக விளையாடியுள்ளார். 17 முறை அணியை வழிநடத்தியுள்ளார். 2009-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வழிநடத்தினார். 2014-ல் தில்லி டேர்டெவில்ஸ் அணியை வழிநடத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் 15 முறை இங்கிலாந்தை வழிநடத்தியுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் 5,695 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் 36 ஆட்டங்களில் 1,001 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 104 டெஸ்டுகளில் 8,181 ரன்கள் எடுத்துள்ளார். 136 ஒருநாள் ஆட்டங்களில் 4,440 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை மார்ச் 24 அன்று எதிர்கொள்கிறது.