
2027 உலகக் கோப்பையில் விளையாடுவது பற்றி இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்பு, சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியுடன் ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறலாம் எனத் தகவல்கள் கசிந்தன.
எனினும், சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை, வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என தெளிவுபடுத்தினார்.
இந்த அறிவிப்பின் மூலம் 2027 உலகக் கோப்பையிலும் ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பிருப்பதாகப் பேச்சுகள் தொடங்கின.
இந்நிலையில் 2027 உலகக் கோப்பை பற்றி ரோஹித் சர்மா வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
"2027 உலகக் கோப்பை பற்றி என்னால் எதுவும் கூற முடியாது. அதற்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. ஆனால், அனைத்து வாய்ப்புகளையும் நான் திறந்தே வைத்துள்ளேன். நான் எப்படி விளையாடுகிறேன் என்பதைப் பார்க்க வேண்டும். தற்போது நான் மிகச் சிறப்பாக விளையாடுகிறேன். இந்த அணியுடன் அனைத்தையும் நான் விரும்பி அனுபவிக்கிறேன். இந்த அணியும் என்னுடனான பயணத்தை விரும்புகிறது. நான் கிரிக்கெட்டை ரசித்து விரும்பி விளையாடும் வரை, அணிக்கு நான் செலுத்தும் பங்களிப்பை என்னால் தொடர முடியும் வரை நான் தொடர்ந்து விளையாடுவேன்" என்றார் அவர்.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் 37 வயது ரோஹித் சர்மா 5 ஆட்டங்களில் 36 சராசரியில் 100 ஸ்டிரைக் ரேட்டில் 180 ரன்கள் எடுத்தார். இறுதிச் சுற்றில் மிக முக்கியமான 76 ரன்களை எடுத்து கோப்பையை வெல்ல உதவினார். 2027 உலகக் கோப்பையின்போது ரோஹித் சர்மா ஏறத்தாழ 40 வயதில் இருப்பார்.