கருண் நாயர் அரை சதம்: மழைக்கு நடுவே தடுமாறிய இந்தியா! | Ind v Eng

கருண் நாயர் மிகக் கடினமான சூழலில் இந்தத் தொடரில் தனது முதல் அரை சதத்தை அடித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
2 min read

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாடாதது உள்பட நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்திய அணியிலும் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாதது உள்பட நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டன.

மழையால் சற்று தாமதமாக டாஸ் போடப்பட்டது. ஷுப்மன் கில் தொடர்ந்து 5-வது முறையாக டாஸில் தோற்றார். இங்கிலாந்து கேப்டன் ஆலி போப் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆடுகளம் மற்றும் சூழல் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்ததால், தொடக்க பேட்டர்கள் ஜெயிஸ்வால் மற்றும் கேஎல் ராகுலை 38 ரன்களுக்குள் இழந்தது இந்தியா.

மழை காரணமாக முன்கூட்டியே எடுக்கப்பட்ட உணவு இடைவேளையில் இந்திய அணி 72 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் மழையால் தாமதமாகத் தொடங்கியது. உணவு இடைவேளை மற்றும் தேநீர் இடைவேளைக்கு நடுவே 6 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. இந்த இடைவெளியில் அவசியமில்லாமல் ரன் ஓட முயற்சித்து 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஷுப்மன் கில்.

108 பந்துகளை எதிர்கொண்டு 38 ரன்கள் எடுத்த சாய் சுதர்சன் ஜாஷ் டங் வீசிய அற்புதமான பந்தில் ஆட்டமிழந்தார். ஜடேஜாவும் 9 ரன்களுக்கு வெளியேறினார். சற்று தாக்குப்பிடித்த துருவ் ஜுரெல் 19 ரன்களுக்கு வெளியேறினார். மழையால் பல ஓவர்களை இழந்ததால், முதல் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

கருண் நாயர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட்டை பாதுகாத்து விளையாடினார்கள். இந்தத் தொடரில் மறுவாய்ப்பைப் பெற்ற கருண் நாயர் மிகக் கடினமான சூழலில் இந்தத் தொடரில் தனது முதல் அரை சதத்தை அடித்தார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 52 ரன்களுடனும் வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள். இங்கிலாந்து அணியில் கஸ் அட்கின்சன் மற்றும் ஜாஷ் டங் தலா 2 விக்கெட்டுகளையும் கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். மழை பாதிப்பால் முதல் நாளில் 64 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன.

Ind v Eng | India v England | India vs England | Ind vs Eng | Karun Nair | Oval Test | Fifth Test | India tour of England | India England Series | Josh Tongue | Shubman Gill | Washington Sundar | Sai Sudharsan | Gus Atkinson | Chris Woakes

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in