
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் கருண் நாயர், உள்நாட்டு கிரிக்கெட்டில் விதர்பாவிலிருந்து மீண்டும் கர்நாடக அணிக்கே திரும்பியுள்ளார்.
முதலில் இருந்து கர்நாடக அணிக்காக விளையாடி வந்த கருண் நாயர், 2022-க்கு பிறகு கர்நாடக அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட காரணத்தால் 2023-ல் விதர்பா அணிக்கு மாறினார்.
இந்தாண்டு தொடக்கத்தில் விதர்பா அணி மூன்றாவது முறையாக ரஞ்சி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் கருண் நாயர். இறுதிச் சுற்றில் கேரளத்துக்கு எதிராக சதமடித்தது உள்பட மொத்தம் 53.93 சராசரியில் 863 ரன்கள் குவித்தார்.
50 ஓவர் விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் விதர்பாவை இறுதிச் சுற்று வரை அழைத்துச் சென்ற கருண் நாயர், 8 இன்னிங்ஸில் தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்தது உள்பட 779 ரன்கள் குவித்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியான இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 542 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.
இதைத் தொடர்ந்தே, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார் கருண் நாயர். ஆனால், இந்தத் தொடரில் மூன்று டெஸ்டுகளில் விளையாடியும் இதுவரை ஒரு அரைசதமும் அவர் எடுக்கவில்லை.
இந்நிலையில், விதர்பாவிலிருந்து மீண்டும் கர்நாடக அணிக்கே திரும்பியுள்ளார் கருண் நாயர். இதற்கான தடையில்லாச் சான்றிதழை விதர்பாவிடமிருந்து பெற்றுள்ளார்.
Karun Nair | Karnataka | Domestic Season | Ranji Trophy | Vidarbha | NOC |