
ஆசியக் கோப்பை டி20 போட்டியில் விளையாட்டைத் தாண்டி, விளையாட்டைச் சுற்றி நடந்த அரசியல் பிரச்னைகள் பெரிதளவில் கவனம் ஈர்த்தது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறுமா என்ற கேள்வி இருந்தது. ஆனால் லீக் சுற்று, சூப்பர் 4 சுற்று மற்றும் இறுதிச் சுற்று என மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது.
ஆனால் மூன்று ஆட்டங்களிலும் ஒருமுறை கூட இரு நாட்டு வீரர்களும் கைக்குலுக்கிக் கொள்ளவில்லை. சூப்பர் 4 சுற்றின்போது இரு நாட்டு வீரர்களும் மைதானத்திலேயே ஆக்ரோஷமாகச் செயல்பட்டது பேசுபொருளானது. அபராதங்கள் விதிக்கப்பட்டன. இறுதிச் சுற்றில் இந்தியா வென்ற பிறகு, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் அமைச்சரும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவருமான மோசின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்தியா மறுத்தது. இதனால், பரிசளிப்பு விழாவில் சலசலப்பு ஏற்பட்டது. இறுதியாக இந்திய வீரர்களுக்கான பதக்கம் மற்றும் கோப்பை கொடுக்கப்படவில்லை. இது சர்ச்சையானது. மோசின் நக்வியின் செயல்பாடு குறித்து ஐசிசியிடம் புகாரளிக்கவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்திய அணிக்கு உலகக் கோப்பை வென்றுகொடுத்த கேப்டன் கபில் தேவ் இந்தியா டுடேவிடம் பேசினார்.
"சில நேரங்களில் ஒரு வீரராக நாட்டின் மீதான உணர்வு இருக்கும். அது இருநாட்டு வீரர்களிடத்திலும் இருக்கும். வீரர் ஒருவருக்கு விருப்பமில்லையெனில், 'பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட எனக்கு விருப்பம் இல்லை' எனக் கூறலாம். ஆனால், விளையாடுவதற்கு உங்களுடைய நாடு அல்லது கிரிக்கெட் வாரியம் அனுமதி கொடுத்துவிட்டால், கைக்குலுக்கிக் கொள்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை.
இதைப் பெரிய விஷயமாக நான் பார்க்கவில்லை. எல்லோரும் கைக்குலுக்கிக் கொள்ள வேண்டும் என்பது புதிதாகக் கொண்டு வரப்பட்டது தான். 20-30 வருடங்களுக்கு முன்பு யாரும் கைக்குலுக்கிக் கொள்ள மாட்டார்கள். டாஸ் முடிந்தபிறகும்கூட யாரும் கைக்குலுக்கிக் கொள்ள மாட்டார்கள்.
ஆனால், எல்லோரும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் நம் அண்டை நாட்டினர். அண்டை நாட்டினரிடம் நல்லுறவு தேவை. எனவே, முன்னோக்கிச் செல்ல பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு. திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
70 ஆண்டுகளில் பெரிய முன்னேற்றம் இல்லை. ஆனால், இச்சூழலிலிருந்து தப்பித்து ஓடிவிட முடியாது. அவர்கள் நம் அண்டை நாட்டினர் தான். மூத்த சகோதரராக இருந்து, நம்மால் முடிந்த அனைத்தையும் செய்து பிரச்னையைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.
ஆம் நிறைய தவறான விஷயங்கள் நடந்துள்ளன தான். அதுகுறித்து பேச நான் விரும்பவில்லை. வாழ்க்கையில் கடந்து செல்ல வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். என்ன நடந்ததோ அது நடந்து முடிந்துவிட்டது. நல்ல எதிர்காலத்தை நோக்கி நகர்வோம் என்று தான் நான் சொல்வேன்" என்றார் கபில் தேவ்.
ஒரு விளையாட்டு வீரராக விளையாட்டில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும் என்பது தான் தனது விருப்பம் என்றும் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
Kapil Dev | Ind v Pak | Asia Cup | Asia Cup 2025 | Asia Cup T20 |