நியூசிலாந்து நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் சர்வதேச டி20யிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்தின் முன்னணி வீரரான கேன் வில்லியம்சன் (35) கடந்த 2011 அக்டோபரில் சர்வதேச டி20யில் அறிமுகமானார். நியூசிலாந்துக்காக 93 ஆட்டங்களில் விளையாடி 33.44 சராசரியில் 2,575 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடினார். இதன்பிறகு, நியூசிலாந்துக்காக எந்தவொரு டி20யிலும் அவர் விளையாடவில்லை.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பைக்குப் பிறகும் நியூசிலாந்துக்காக எந்தவொரு ஆட்டத்திலும் அவர் விளையாடாமல் இருந்தார். ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்காவுடனான முத்தரப்பு டி20 தொடர் மற்றும் ஜிம்பாப்பேவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. இதற்குப் பதிலாக டி20 பிளாஸ்ட், கவுன்டி சாம்பியன்ஷிப், தி ஹண்ட்ரட் போட்டிகளில் அவர் விளையாடினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் பங்கேற்கவில்லை. இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் மட்டும் வில்லியமசன் பங்கேற்றார். இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பு நியூசிலாந்து அணி தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுடன் டி20 தொடர்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இரு முக்கிய தொடர்களிலும் அவர் பங்கேற்கவில்லை.
இதற்கு மத்தியில் தான் ஐபிஎல் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டார். எனவே, டி20யில் கேன் வில்லியம்சனின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழத் தொடங்கியது. இந்நிலையில், சர்வதேச டி20யிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். நியூசிலாந்துக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளார்.
நியூசிலாந்துக்காக விளையாடிய 93 டி20 ஆட்டங்களில் 75 ஆட்டங்களில் அணியை கேப்டனாக வழிநடத்தியுள்ளார். 2016 மற்றும் 2022 டி20 உலகக் கோப்பைகளில் அரையிறுதி வரை நியூசிலாந்தை அழைத்துச் சென்றார். 2021-ல் இறுதிச் சுற்று வரை நியூசிலாந்தை அழைத்துச் சென்றார்.
"எனக்கும் அணிக்கும் இதுவே சரியான நேரம். டி20 உலகக் கோப்பையில் கவனம் செலுத்த வேண்டியுள்ள நிலையில், அடுத்த டி20 தொடருக்கு முன்பு அணிக்கு இது ஒரு தெளிவைக் கொடுக்கிறது" என்று வில்லியம்சன் தெரிவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் வில்லியம்சன் பங்கேற்கப்போவதில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க வில்லியம்சன் தயாராகவுள்ளார்.
New Zealand's star cricketer Kane Williamson has announced his retirement from T20 internationals to focus more in ODI and Test.
Kane Williamson | New Zealand | T20I | Retirement | Kane Williamson retired |