சர்ச்சையைக் கிளப்பிய கம்ரான் அக்மல்: ஹர்பஜன் சிங் பதிலடி!

"சீக்கியர்களின் வரலாறு பற்றி தெரிந்து கொண்டு நீங்கள் பேசியிருக்க வேண்டும்".
சர்ச்சையைக் கிளப்பிய கம்ரான் அக்மல்: ஹர்பஜன் சிங் பதிலடி!
சர்ச்சையைக் கிளப்பிய கம்ரான் அக்மல்: ஹர்பஜன் சிங் பதிலடி!

அர்ஷ்தீப் சிங் மற்றும் சீக்கிய மதத்தைப் பற்றி முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் கேலி செய்யும் வகையில் பேசிய நிலையில், அதற்கு தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 2 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி தான் விளையாடிய இரு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்தது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்த ஆட்டத்தின் போது முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் அர்ஷ்தீப் சிங் மற்றும் சீக்கிய மதத்தைப் பற்றி கேலி செய்யும் வகையில் பேசிய நிலையில், அதற்கு தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த ஆட்டத்தின் போது பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் வர்ணனையில் இருந்த கம்ரான் அக்மல், “மணி 12-க்கு மேல் ஆகிவிட்டது. இனி அர்ஷ்தீப் சிங்குக்கு ஓவர் கொடுத்தால் பாகிஸ்தான் வீரர்கள் அடித்து விடுவார்கள்” என பேசியுள்ளார். இந்நிலையில் இந்த கருத்து சீக்கியர்களை குறிப்பிட்டு அவமதிக்கும் வகையில் பேசியதாக உள்ளது எனக் கூறி, பலரும் கம்ரான் அக்மலை எதிர்த்து தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர்.

கம்ரான் அக்மலின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹர்பஜன் சிங், “சீக்கியர்களின் வரலாறு பற்றி தெரிந்து கொண்டு நீங்கள் பேசியிருக்க வேண்டும். சீக்கியர்கள் தான் உங்களது தாய் மற்றும் சகோதரிகளை எதிரிகளிடமிருந்து காப்பாற்றினார்கள். அப்போது மணி இரவு 12. உங்களை நினைத்து அவமானப்படுகிறேன்” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில், “நான் சமீபத்தில் பேசியதை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன், அதற்காக நான் ஹர்பஜன் சிங்கிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என் வார்த்தைகள் பொருத்தமற்றதாகவும் மரியாதை குறைவாகவும் இருந்தன. உலகமெங்கும் உள்ள சீக்கியர்கள் மீது எனக்கு அதிகமான மரியாதை உண்டு, நான் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அதனை கூறவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்” என கம்ரான் அக்மல் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in