தனது முதல் 8 டெஸ்டிலும் அரைசதம் அடித்த முதல் வீரர் எனும் உலக சாதனையைப் படைத்துள்ளார் கமிந்து மெண்டிஸ்.
இலங்கை - நியூசிலாந்துக்கு இடையிலான 2-வது டெஸ்ட் நேற்று (செப். 26) தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 602 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 182 ரன்கள் எடுத்தார். இது அவரின் 5-வது சதமாகும். மேலும், டெஸ்டில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த 2-வது வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார் கமிந்து மெண்டிஸ். இது தவிர இந்த டெஸ்டில் மேலும் சில சாதனைகளைப் படைத்துள்ளார் .
2-வது டெஸ்டில் கமிந்து மெண்டிஸ் நிகழ்த்திய சாதனைகள்
* தனது முதல் 8 டெஸ்டிலும் அரைசதம் அடித்த முதல் வீரர் - முன்னதாக பாகிஸ்தானின் சவுத் ஷகீல் தனது முதல் 7 டெஸ்டில் அரைசதம் அடித்தார்.
* டெஸ்டில் அதிவேகமாக 1000 ரன்களைக் (13 இன்னிங்ஸ்) கடந்த 2-வது வீரர். இதன் மூலம் டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்துள்ளார் - இங்கிலாந்தின் ஹேர்பெர்ட், மே.இ. தீவுகளின் எவர்டன் (இருவரும் 12 இன்னிங்ஸ்).
* தொடர்ந்து 8 டெஸ்டில் அரைசதம் அடித்த 2-வது இலங்கை வீரர் - மற்றொரு வீரர் சங்கக்காரா.
* குறைந்த இன்னிங்ஸில் 5-வது சதத்தை நிறைவு செய்த வீரர்களின் பட்டியலில் 5-வது இடம். 13-வது இன்னிங்ஸில் இந்த சாதனையைப் படைத்த கமிந்து மெண்டிஸ், வேகமாக 5 சதங்களை விளாசிய இலங்கை வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.
* 5-வது வரிசையில் களமிறங்கி, ஒரே ஆண்டில் 5 சதங்களை அடித்த 3-வது வீரர் - முன்னதாக, பேர்ஸ்டோ மற்றும் மைக்கல் கிளார்க் இந்தச் சாதனையை நிகழ்த்தினர்.
* 1000 ரன்களைக் கடந்து, அதிக சராசரியை கொண்ட 2-வது வீரர். கமிந்து மெண்டிஸ் - 91.27, டான் பிராட்மேன் - 99.94