
ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இந்தியாவுடனான பிஜிடி டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான பிஜிடி தொடரின் நான்காவது டெஸ்ட் பிரிஸ்பேனிலுள்ள காபாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்தது.
நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்து இன்னும் 193 ரன்கள் பின்தங்கியுள்ளது. வெற்றிகரமாக ஃபாலோ ஆனை தவிர்த்துள்ளது.
இந்த டெஸ்டில் ஹேசில்வுட் மொத்தம் 6 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார். நான்காவது நாள் ஆட்டத்துக்கு முன்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்குக் கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, நான்காவது நாள் ஆட்டத்தில் அவர் ஒரு ஓவர் மட்டுமே வீசினார். இதன் பிறகு ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனை சென்றார்.
ஹேசில்வுட் காயம் குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியதாவது:
"ஜோஷ் ஹேசில்வுட் வலது கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரிஸ்பேனில் நடைபெறும் இந்தியாவுடனான டெஸ்டில் அவர் மேற்கொண்டு பங்கெடுக்க மாட்டார். இன்று காலை பயிற்சியின்போது அவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு ஓவர் மட்டும் வீசிய நிலையில், அவரால் மேற்கொண்டு பந்துவீச்சைத் தொடர முடியவில்லை. டெஸ்ட் தொடரில் (பிஜிடி) மீதமுள்ள ஆட்டங்களை ஹேசில்வுட் தவறவிடுகிறார். உரிய நேரத்தில் மாற்று வீரருக்கான அறிவிப்பு வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்னில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்டில் ஹேசில்வுட்டுக்குப் பதில் ஸ்காட் போலண்ட் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடிலெய்ட் பகலிரவு டெஸ்டிலும் ஹேசில்வுட் காயம் காரணமாக விளையாடவில்லை. அப்போது போலண்ட் களமிறங்கினார்.