
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அடுத்த ஆண்டு இறுதிவரை ஜொனாதன் டிராட் நீடிக்கவுள்ளார்.
2024-ல் ஆப்கானிஸ்தான் அணி பல்வேறு சாதனைகளைப் படைத்த நிலையில், இவருடையப் பதவிக்காலம் மேலும் 12 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைமைப் பயிற்சியாளராக ஜூலை 2022-ல் நியமிக்கப்பட்டார் ஜொனாதன் டிராட். இவர் பொறுப்பேற்றதிலிருந்து 34 ஒருநாள் ஆட்டங்களில் 14 வெற்றியையும் 44 டி20களில் 20 வெற்றிகளையும் பெற்றுள்ளது ஆப்கானிஸ்தான்.
குறிப்பாக, 2024-ல் முதன்முறையாக டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான். ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தியது. 2023 ஒருநாள் உலகக் கோப்பை புள்ளிகள் பட்டியலில் முதல் 8 இடங்களில் பிடித்த இடம்பிடித்த ஆப்கானிஸ்தான், அடுத்தாண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இவருடையப் பொறுப்பில் ஆப்கானிஸ்தான் நிறைய வெற்றிகளைக் கண்டுள்ளதால், அடுத்தாண்டு இறுதிவரை தலைமைப் பயிற்சியாளராக இவருடையப் பொறுப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2021 டி20 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்து அணியில் ஆலோசகராக இருந்தார். இதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளரானார். தலைமைப் பயிற்சியாளராக இதுவே இவருடைய முதல் பொறுப்பு.