
India vs England Test Series 2025
இந்தியாவுக்கு எதிராக லார்ட்ஸில் நாளை (ஜூலை 10) தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்குப் பயணம் செய்துள்ள இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலிரு டெஸ்டுகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றியைப் பெற்று சமநிலையில் உள்ளன. மூன்றாவது டெஸ்டுக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் சேர்க்கப்பட்டார்.
முதலிரு டெஸ்டுகளில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நிறைய பணிச் சுமை இருந்ததால், கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக அட்கின்சன் சேர்க்கப்பட்டார். பிர்மிங்ஹம் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு, வேகப்பந்துவீச்சில் மாற்றம் இருக்கும் என்பதற்கான சமிக்ஞை இங்கிலாந்து அணி நிர்வாகம் தரப்பிலிருந்து வந்தது. இரண்டாவது டெஸ்டுக்கு முன் அணியில் சேர்க்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சர் லார்ட்ஸ் டெஸ்டில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் படிக்க: ஒரு டெஸ்டும் ஓராயிரச் சாதனையும்!
இந்நிலையில் லார்ட்ஸ் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதலிரு டெஸ்டுகளில் விளையாடிய ஜாஷ் டங் நீக்கப்பட்டு, எதிர்பார்த்தபடி ஆர்ச்சர் களமிறங்குகிறார். இந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் 11 விக்கெட்டுகளுடன் ஜாஷ் டங் முதலிடத்தில் இருந்தாலும், 4.56 எகானமியில் பந்துவீசியதாலும் பணிச்சுமை காரணமாகவும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
4 வருடங்களுக்குப் பிறகு
ஆர்ச்சர் கடைசியாக 2021-ல் இந்தியாவுக்கு எதிராக அஹமதாபாதில் நடைபெற்ற டெஸ்டில் விளையாடினார். காயத்திலிருந்து குணமடைந்துள்ள அவர், 4 வருடங்களுக்குப் பிறகு டெஸ்டில் களமிறங்குகிறார். ஜாஷ் டங் பதிலாக ஆர்ச்சர் சேர்க்கப்பட்டது தவிர, வேறு எந்த மாற்றத்தையும் இங்கிலாந்து மேற்கொள்ளவில்லை.
இங்கிலாந்து அணி:
ஸாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், சோயிப் பஷீர்.