
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள ஜோ ரூட், சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.
இங்கிலாந்து அணி அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்குப் பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து, சாம்பியன்ஸ் கோப்பையில் பங்கேற்கிறது.
இந்தியா பயணம் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ஒருநாள் அணியில் ஜோ ரூட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடைசியாக இந்தியாவில் கடந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் விளையாடினார். இதன்பிறகு, எந்தவொரு சர்வதேச ஒருநாள் போட்டியிலும் அவர் விளையாடவில்லை.
இங்கிலாந்து அணி லீக் சுற்றிலேயே வெளியேறிய கடந்த உலகக் கோப்பையில் ஜோ ரூட் 30.66 சராசரியில் 276 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
தற்போது சாம்பியன்ஸ் கோப்பைக்காக ஒருநாள் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை.
ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தொடக்க பேட்டர்களாக பென் டக்கெட், பில் சால்ட் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணிகளுக்கும் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு பிரெண்டன் மெக்கல்லம் எதிர்கொள்ளும் முதல் சவால் இது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஒருநாள் தொடருக்கான அணி, தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சாம் கரன், ரீஸ் டாப்லி உள்ளிட்டோர் அணியில் இடம்பெறவில்லை.
இந்தியாவுடனான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பைக்கான இங்கிலாந்து அணி
ஜாஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேகப் பெத்தெல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், லியம் லிவிங்ஸ்டன், அடில் ரஷித், ஜோ ரூட், சகிப் மஹ்மூத், பில் சால்ட், மார்க் வுட்.
இந்தியாவுடனான டி20-க்கான இங்கிலாந்து அணி
ஜாஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அஹமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேகப் பெத்தல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், லியம் லிவிங்ஸ்டன், அடில் ரஷித், சகிப் மஹ்மூத், பில் சால்ட், மார்க் வுட்.