
ஜிதேஷ் சர்மாவின் அதிரடியான பேட்டிங்கால் வெற்றி பெற்ற ஆர்சிபி, குவாலிஃபையர் 1-ல் விளையாடுவதை உறுதி செய்தது.
ஐபிஎல் 2025 போட்டி மார்ச் 22 அன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக, பஞ்சாப் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ் இடையிலான ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. பிறகு, ஐபிஎல் போட்டி ஒரு வார காலத்துக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. வெளிநாட்டு வீரர்கள் சிலர் இந்தியாவை விட்டு வெளியேறினார்கள்.
போர் பதற்றம் தணிந்த பிறகு, மே 17-ல் ஐபிஎல் போட்டி மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. மே 25-ல் நடைபெறவிருந்த இறுதிச் சுற்று ஜூன் 3-க்கு மாற்றப்பட்டது. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க வீரர்கள் சிலரால் சொந்த நாட்டுப் பணி காரணமாக மே 25-க்கு பிறகு பங்கேற்க முடியாத சூழல் உருவானது. இதனால், தற்காலிகமாக மாற்று வீரர்களைத் தேர்வு செய்ய ஐபிஎல் அணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மே 17-க்கு பிறகு ஐபிஎல் 2025 போட்டி மீண்டும் தொடங்கியது. லீக் சுற்றில் மொத்தம் 70 ஆட்டங்கள். 7 ஆட்டங்கள் மீதமிருந்த நிலையிலேயே பிளே ஆஃப் சுற்றுக்கு 4 அணிகள் தகுதி பெற்றுவிட்டன. குஜராத் டைடன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் முதல் நான்கு இடங்களை உறுதி செய்தன. இருந்தபோதிலும், முதலிரு இடங்களைப் பிடித்து குவாலிஃபையர் 1-ல் விளையாடப்போகும் இரு அணிகள் எவை என்பதை அறிய கடைசி இரு ஆட்டங்கள் வரை காத்திருக்க நேர்ந்தது.
கடைசிக்கு முந்தைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மோதின. இதில் வெற்றி பெறும் அணி முதலிரு இடங்களில் ஓர் இடத்தை உறுதி செய்யும், தோல்வியடையும் அணி மூன்றாவது அல்லது நான்காவது இடத்தைப் பிடிக்கும் என்ற நிலை இருந்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 9 பந்துகள் மீதமிருக்க 187 ரன்கள் எடுத்து குவாலிஃபயர் 1-ல் விளையாடுவதை உறுதி செய்தது.
கடைசி ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மோதின. இதில் ஆர்சிபி வெற்றி பெற்றால், குவாலிஃபயர் 1-ல் விளையாடுவதை உறுதி செய்யலாம் என்ற நிலை இருந்தது.
முதலில் பேட்டிங் செய்த லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் ரிஷப் பந்த் சதத்தால் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் குவித்தது. ரிஷப் பந்த் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 118 ரன்கள் குவித்தார்.
228 ரன்கள் என்ற மிகக் கடின இலக்கை 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 8 பந்துகள் மீதமிருந்த நிலையில் அடைந்து ஆர்சிபி அசாத்தியமான வெற்றியைப் பெற்றது. விராட் கோலி தொடக்கத்தில் 30 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
பொறுப்பு கேப்டனாக விளையாடி வரும் ஜிதேஷ் சர்மா, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உள்பட 85 ரன்கள் எடுத்து ஆர்சிபியின் வெற்றியை உறுதி செய்தார். குவாலிஃபையர் 1-ல் விளையாடுவதையும் உறுதி செய்தார்.
புள்ளிகள் பட்டியல்
பஞ்சாப் கிங்ஸ் - 19 புள்ளிகள் (0.372)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 19 புள்ளிகள் (0.301)
குஜராத் டைடன்ஸ் - 18 புள்ளிகள் (0.254)
மும்பை இந்தியன்ஸ் - 16 புள்ளிகள் (1.142)
குவாலிஃபையர் 1 - மே 29
பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, முல்லாபூர்
எலிமினேட்டர் - மே 30
குஜராத் டைடன்ஸ் - மும்பை இந்தியன்ஸ், முல்லாபூர்