
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா உள்நாட்டு கிரிக்கெட் பருவம் தொடங்கும் முன் விதர்பாவிலிருந்து பரோடாவுக்கு அணி மாறியுள்ளார்.
31 வயது ஜிதேஷ் சர்மா உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விதர்பா அணிக்காக விளையாடி வந்தார். கருண் நாயர் தலைமையிலான வெள்ளைப் பந்து அணிகளில் ஜிதேஷ் சர்மாவுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்து வந்தன.
ஆனால், ரஞ்சி அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் இருந்தது. விதர்பாவின் கேப்டன் அக்ஷய் வட்கர் அணியின் விக்கெட் கீப்பராக இருப்பதால், ஜிதேஷ் சர்மா முதன்மை விக்கெட் கீப்பராக இல்லாமல் இருந்தார். 2024-25 ரஞ்சி கோப்பையில் ஓர் ஆட்டத்தில் கூட ஜிதேஷ் சர்மா விளையாடவில்லை. 2015-16-ல் அறிமுகமானவுடன் இதுவரை மொத்தம் 18 முதல் தர கிரிக்கெட்டில் மட்டுமே ஜிதேஷ் சர்மா விளையாடியுள்ளார்.
இந்நிலையில் தான், விதர்பா அணியிலிருந்து பரோடா அணிக்கு மாறியுள்ளார் ஜிதேஷ் சர்மா. பரோடாவின் கேப்டனாக இருப்பவர் கிருனாள் பாண்டியா. இவர் ஆர்சிபியில் ஜிதேஷ் சர்மாவுடன் இணைந்து விளையாடி வருகிறார். கிருனாள் பாண்டியா உதவியுடன் பரோடாவுக்கு மாறியிருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரோடாவுக்கு மாறியுள்ளதன் மூலம், ஜிதேஷ் சர்மாவுக்குப் புதிய கதவுகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2025-ல் ஆர்சிபி கோப்பையை வென்றதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் ஜிதேஷ் சர்மா. லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் விளாசி ஆர்சிபி அணி புள்ளிகள் பட்டியலில் முதலிரு இடங்களைப் பிடிக்க உதவினார்.
Jitesh Sharma |Baroda | Vidarbha | Krunal Pandya | RCB | Royal Challengers Bengaluru