
ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் உள்ள பி பிளாக் ஸ்டேண்டுக்கு இந்திய மகளிர் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜுலான் கோஸ்வாமி பெயரைச் சூட்டவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2002-2022 வரை இந்திய மகளிர் அணிக்காக 12 டெஸ்டுகள், 204 ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் 68 டி20 ஆட்டங்களில் விளையாடி முறையே 44, 255, 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஜுலான் கோஸ்வாமி.
மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ஜுலான் கோஸ்வாமி. இந்நிலையில் இவர் செய்த சாதனைகளை கௌரவிக்கும் வகையில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் உள்ள பி பிளாக் அரங்கிற்கு ஜுலான் கோஸ்வாமியின் பெயரை சூட்டவேண்டும் என பெங்கால் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் உள்ள பி பிளாக் ஸ்டேண்டுக்கு ஜுலான் கோஸ்வாமி பெயரைச் சூட்டவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 22 அன்று நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து ஆடவர் டி20 ஆட்டத்தின்போது பி பிளாக் ஸ்டேண்டுக்கு ஜுலானின் பெயர் வைக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, முன்னாள் வீரர் பங்கஜ் ராய் போன்றோரின் பெயர்கள் ஏற்கெனவே ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் உள்ள ஸ்டேண்டுகளுக்குச் சூட்டப்பட்டுள்ளது.