
மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ள ஜஸ்பிரித் பும்ரா ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட உடற்தகுதியுடன் இருப்பதாக மும்பை தலைமைப் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியப் பயணத்தின்போது சிட்னி டெஸ்டிலிருந்து காயம் காரணமாக பாதியில் விலகினார் ஜஸ்பிரித் பும்ரா. இதே டெஸ்டில் ஒருமுறை பேட்டிங் செய்ய மட்டும் அவர் வந்தார். இதன்பிறகு, சாம்பியன்ஸ் கோப்பை உள்பட எந்தவொரு போட்டியிலும் பும்ரா பங்கேற்கவில்லை. ஐபிஎல் போட்டி தொடங்கும்போது, தொடக்கத்தில் சில ஆட்டங்களில் அவர் விளையாட மாட்டார் எனத் தகவல்கள் வெளியாகின. எனினும், மும்பை அணியுடன் அவர் எப்போது இணைவார் என்பதும் உறுதிபடத் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ள ஜஸ்பிரித் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். ஜூன் 28-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், பும்ராவின் உடற்தகுதியில் பிசிசிஐ மிகுந்த கவனம் செலுத்தி வந்தது. பிசிசிஐ மருத்துவக் குழுவிடமிருந்து ஒப்புதல் கிடைத்த பிறகே, அவர் மும்பை அணியுடன் இணைந்துள்ளார் எனத் தெரிகிறது.
இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் ஒரு வெற்றியை மட்டுமே மும்பை பெற்றுள்ளது. மேலும், மும்பை அணியில் அஷ்வனி குமார் மற்றும் சத்யநாராயண ராஜூ என இளம் பந்துவீச்சாளர்கள் உள்ள நிலையில், பும்ராவின் வருகை என்பது மும்பைக்குப் பெரிய பலமாக அமைந்துள்ளது.
மும்பை அணி தனது அடுத்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்துக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைப் பயிற்சியாளர் ஜெயவர்தனே பும்ராவின் வருகை குறித்து பகிர்ந்துள்ளார்.
"ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட உடற்தகுதியுடன் பும்ரா இருக்கிறார். அவர் இன்று பயிற்சி மேற்கொண்டு வருகிறார். நேற்றிரவு மும்பை அணியுடன் அவர் இணைந்தார். அவர் இன்று பந்துவீசுகிறார். எனவே, எல்லாம் நலம்" என்றார் ஜெயவர்தனே.
ஐபிஎல் போட்டியில் 2013-ல் அறிமுகமானதிலிருந்தே மும்பை அணிக்காக விளையாடி வரும் பும்ரா, 133 ஆட்டங்களில் 165 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.