
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
ஐசிசியின் தலைவராக இருந்த நியூசிலாந்தைச் சேர்ந்த கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. ஏற்கெனவே ஒரு முறை ஐசிசியின் தலைவராக பணியாற்றிய அவர் 3-வது முறையாக போட்டியிடமாட்டேன் என அறிவித்தார்.
இதன் பிறகு ஐசிசியின் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கடந்த ஆகஸ்ட் 27-க்குள் வேட்புமனுவை அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த பதவிக்கு பிசிசிஐ செயலர் ஜெய் ஷா வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் ஐசிசியின் தலைவராக அவர் போட்டியின்றி தேர்வானார்.
இதன் மூலம் மிக குறைந்த வயதில் ஐசிசியின் தலைவராக தேர்வாகி ஜெய் ஷா சாதனையும் படைத்தார்.
டிசம்பர் 1 முதல் ஜெய் ஷாவின் பதவிக்காலம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ஐசிசியின் தலைவராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் பங்கேற்க பிசிசிஐ மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவேண்டும் என்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதியாக உள்ளது.
இது குறித்து நவம்பர் இறுதியில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
எனவே, சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியை நடத்துவது குறித்து முடிவெடுப்பதே ஜெய் ஷாவின் முதல் கடமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2009-ல் குஜராத் கிரிக்கெட் சங்கத்துடன் தனது பயணத்தைத் தொடங்கினார் ஜெய் ஷா. 2019-ல் பிசிசிஐயின் செயலராக இளம் வயதில் பொறுப்பேற்று சாதனை படைத்த ஜெய் ஷாவின் பதவிக்காலத்தில் தான் அஹமதாபதில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டது.