ஜெய் ஷா
ஜெய் ஷாANI

இம்பாக்ட் வீரர் விதிமுறை நிரந்தரமானதல்ல: ஜெய் ஷா

"இம்பாக்ட் விதிமுறை குறித்து வீரர்கள் குற்றம்சாட்டினால், இது குறித்து பேசுவோம். ஆனால், இதுவரை யாரும் எதுவும் சொல்லவில்லை".

இம்பாக்ட் வீரர் விதிமுறை நிரந்தரமானதல்ல என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இம்பாக்ட் வீரர் விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரு ஆட்டத்தில், அதன் சூழலுக்கு ஏற்ப ஒரு பேட்டரையோ, பந்து வீச்சாளரையோ மற்றொரு வீரருக்கு பதிலாக அணியில் சேர்க்கலாம். ஆரம்பம் முதல் இதற்கு சில வீரர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

சமீபத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும், தனக்கு இம்பாக்ட் வீரர் விதிமுறை மேல் பெரிய அபிப்பிராயம் இல்லை எனவும் இது இந்திய அணிக்கு நல்லது கிடையாது எனவும் பேசியிருந்தார். இந்த விதிமுறையால் ஒரு அணி அதிக ரன்களை குவிக்க முடிகிறது என பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இம்பாக்ட் வீரர் விதிமுறை நிரந்தரமானதல்ல என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

ஜெய் ஷா பேசியதாவது: “இம்பாக்ட் வீரர் விதிமுறை சோதனை முறையில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு ஆட்டத்திலும் 2 இந்திய வீரர்கள் கூடுதலாக விளையாட முடிகிறது. இது குறித்து வீரர்கள், அணி நிர்வாகம் மற்றும் ஒளிபரப்பாளர்கள் என அனைவரிடமும் விவாதிப்போம்.

இது நிரந்தரமானதல்ல, அதற்காக இனி இந்த விதிமுறை இருக்காது எனவும் சொல்லவில்லை. இருப்பினும், இம்பாக்ட் விதிமுறை குறித்து வீரர்கள் குற்றம்சாட்டினால், இது குறித்து பேசுவோம். ஆனால், இதுவரை யாரும் எதுவும் சொல்லவில்லை. எனவே டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு இது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in